ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் சிங்கப்பூரின் நைட் சஃபாரியில் இனி பராமரிக்கப்படும்.
அந்த நான்கு விலங்குகளுக்கும் மூன்று வயது. நைட் சஃபாரியில் ஏற்கெனவே மூன்று டாஸ்மேனியன் விலங்குகள் உள்ளன.
இத்தகவலை மண்டாய் வனவிலங்குக் குழுமம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்டது.
டாஸ்மேனியன் டெவில் எனப்படும் விலங்கினத்தைப் பாதுகாக்கும் திட்டத்தின்கீழ் இந்த விலங்குகள் நைட் சஃபாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய விலங்குப் பாதுகாப்பு அமைப்பான ‘ஆசி ஆர்க்’ அவ்விலங்குகளை அனுப்பிவைத்துள்ளது.
அருகி வரும் விலங்கினப் பட்டியலில் டாஸ்மேனியன் டெவில் விலங்குகளும் இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் உள்ள டாஸ்மேனியத் தீவில் இருக்கும் இந்த விலங்குகளிடையே ஒருவகையான முகக்கட்டி நோய் பரவியதை அடுத்து அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பரவக்கூடிய இப்புற்றுநோயால் பல டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் மடிந்தன.
டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வனப்பகுதிகளில் அவற்றின் நிலை மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் உலகளாவிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் ஒரு பகுதியாக இந்த நான்கு டாஸ்மேனியன் டெவில் விலங்குகளும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

