அபுஜா: சமயச் சுதந்திரம் இல்லாத நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவை அமெரிக்கா சேர்த்துள்ளது. தவறான தரவுகளைக் கொண்டு அந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய தகவல், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் முகம்மது இட்ரிஸ் மலாகி அதனை மறுத்து கருத்துரைத்துள்ளார்.
கிறிஸ்துவர்களின் சமயச் சுதந்திரத்தை பறித்துவிட்டதால் நைஜீரியாவை ’கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில்’ இணைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் ஆணை பிறப்பித்தார். அதனுடன் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை நைஜீரியா தடுக்காவிடில் உடனடி ராணுவ நடவடிக்கையை எடுக்கும்படி தற்காப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டார் அதிபர் டிரம்ப். இதனால் அமெரிக்கா, நைஜீரியா இருநாட்டு உறவுகளும் பாதிப்படைந்துள்ளன. ராணுவத் தாக்குதல் தேவையற்றது, மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவசரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை இது என்று நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“சமயங்களுக்கு எதிரான தாக்குதல்களை நாங்கள் எதிர்கொள்ளவில்லை, முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தவறான தகவல்களைக் கொண்டு எடுக்கப்படும் முடிவு,” என்று அமைச்சர் இட்ரிஸ் கூறினார்.
“தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் போராடிவருகிறோம், கிறிஸ்துவர்களை எதிர்த்து அல்ல,” என்று நைஜீரிய தற்காப்பு அமைச்சின் தலைவர் தளபதி ஒலுஃபேமி ஒலுயெடே கூறினார். நைஜீரியாவின் இறையாண்மை உறுதிசெய்யப்படும்வரை, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் ராணுவ உதவியை நைஜீரிய அரசாங்கம் வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற அதிபர் போலா டிநிபுவின் அரசாங்கம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சர் இட்ரிஸ் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் வட்டார நட்பு நாடுகளுடன் இணைந்து நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரையும் பாதிக்கும் தீவிரவாதத்தை துடைத்தொழிக்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் 13,500 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 17,000 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். சுமார் 11,200 பெண்கள், குழந்தைகள் உள்ளடங்கிய பிணைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் இட்ரிஸ் விளக்கினார்.

