டெல் அவிவ்: மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக அண்மையில் தாக்குதல் தொடுத்த இஸ்ரேலியர்கள் நீதிக்குமுன் நிறுத்தப்படுவர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதிகூறியிருக்கிறார்.
அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, அமைச்சர்களுடன் அதுபற்றிப் பேசப்போவதாக அவர் திங்கட்கிழமை (நவம்பர் 17) சொன்னார்.
அதே நாள் பெத்லஹெமுக்கு அருகே உள்ள பாலஸ்தீன கிராமமான ஜாபாவில் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் இஸ்ரேலியர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னர் சாயிர் எனும் கிராமத்தில் உள்ள மக்களைத் தாக்கிச் சொத்துகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வாஃபா செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அனைத்துலக அளவில் இஸ்ரேலுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.
திரு நெட்டன்யாகு அமைச்சர்களுடன் பேசப்போவதாகச் சொன்னது, வன்முறையைக் களைவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
“வன்முறைச் சம்பவங்களையும் சிறிய தீவிரவாதக் குழுவினர் சட்டத்தை அவர்களின் கையிலெடுத்ததையும் நான் கடுமையாகப் பார்க்கிறேன்,” என்றார் திரு நெட்டன்யாகு.
கலகம் செய்வோர் மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அந்த விவகாரத்தில் தாம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்போவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் கூறினார்.
ஜாபாவில் வன்முறையில் ஈடுபட்டோரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் தாக்குதல்களை நிறுத்த அனைத்துலகச் சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாலஸ்தீனத் தரப்பின் அமைச்சரவை வலியுறுத்தியது. அனைத்துலகச் சட்டத்தை மீறி, இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆதரவோடும் பாதுகாப்போடும் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அது கூறியது.
மேற்குக் கரையில் 2.7 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். எதிர்காலத்தில் பாலஸ்தீன நாடு அமைவதற்கான திட்டத்தில் அது முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகளை விரைவாக விரிவாக்குவதை இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு ஏறக்குறைய அரை மில்லியன் இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

