யங்கூன்: தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் செயல்பட்டுவந்த மோசடிக் கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புதன்கிழமை (நவம்பர் 19) மியன்மார் ராணுவம் தெரிவித்துள்ளது.
சட்டத்துக்கு எதிராக கள்ளச் சந்தைகளில் செயல்பட்ட 350 பேர் இணைய மோசடிக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மியன்மார் ராணுவம் ஊடகங்களிடம் கூறியுள்ளது.
குறிப்பாக அரசாங்க ஊடகமான ‘தி குளோபல் லைட் ஆஃப் மியன்மார்’ இச்செய்தியை வெளியிட்டது.
அதன்படி, ‘ஷுவீ கொக்கோ’ என்று அழைக்கப்படும் சூதாட்டக் கூடங்கள் நடத்தியதோடு மற்றும் மோசடிகளிலும் ஈடுபட்டக் கும்பலை ராணுவம் செவ்வாய்க்கிழமையன்று முறியடித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் கோரப் பிடியில் சிக்கியுள்ள மியன்மாரின் எல்லை வட்டாரங்களில் வீட்டு மோசடி, காதல் மோசடி, வர்த்தக மோசடி என பலதரப்பட்ட ஏமாற்று வேலைகளை இணையத்தை பயன்படுத்துவோர்மீது ஏவி, மோசடிக் கும்பல்கள் பல பில்லியன் வெள்ளி மதிப்புள்ள தொகையைப் பெற்றுள்ளனர்.
மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். அதற்கு சீனாவின் தூண்டுதலே காரணமென்று நம்பப்படுகிறது.
ராணுவ ஆட்சியாளர்களின் விளம்பர உத்திகளின் அங்கமாக அக்டோபர் மாதம் கடுமையான தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளனர். மியன்மார் ஆட்சியாளர்களால் ஆதரவு நல்கப்படும் சீனாவைப் பகைத்துக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்யப்படுவதாக கண்காணிப்பாளர்களால் கூறப்படுகிறது.
மேலும் அந்த மோசடிக் கும்பல்களின் வருவாய், ஒருவகையில் மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான போராளிகளுக்குச் செல்வதாகவும் சந்தேகம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நடந்த ராணுவக் கைது நடவடிக்கையில் 346 வெளிநாட்டினர் பிடிபட்டனர் என்று அரசாங்க ஊடகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதலைக் கொள்ளி எறும்பைப் போல ஏமாற்றப்படுவோரும், மோசடிகளில் ஈடுபடுவோரும் சீனாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது, சீன அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

