தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக் தடையை மீண்டும் 90 நாள்களுக்கு ஒத்திவைத்த திரு டிரம்ப்

2 mins read
8a2eb620-efae-4595-9741-de1c314beae5
டிக்டாக் நிறுவனம் பல மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தளம் என்று திரு டிரம்ப் அறிந்திருப்பதாக வெள்ளை மாளிகை சொன்னது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகத் தளமான டிக்டாக்கிற்குக் கொடுத்த கால அவகாசத்தை மேலும் 90 நாள்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

அடுத்த 90 நாள்களில் அதாவது செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் டிக்டாக் சீனர் அல்லாதோரிடம் அதன் தளத்தை விற்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் அது தடை செய்யப்படும்.

“டிக்டாக்கிற்கான காலக்கெடுவை 90 நாள்களுக்கு நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சமூகத் தளத்தில் பதிவிட்டார்.

மூன்றாவது முறையாக டிக்டாக் மீதான தடையைத் திரு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

திரு டிரம்ப்பின் முடிவை டிக்டாக் நிறுவனம் வரவேற்றுள்ளது.

“அதிபர் டிரம்ப்பின் தலைமைத்துவத்துக்கு நன்றியுடன் இருக்கிறோம். 170 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்களுக்கு டிக்டாக் தொடர்ந்து சேவை வழங்குவதை உறுதிசெய்வதை ஆதரிக்கிறோம்” என்று டிக்டாக் நிறுவனம் குறிப்பிட்டஹ்டு.

அதிபராகப் பதவியேற்றதை அடுத்து திரு டிரம்ப் டிக்டாக் மீதான தடையை 75 நாள்கள் தள்ளிப்போட்டார். இரண்டாவது முறை அவர் ஒத்திவைத்த தடை ஜூன் 19ஆம் தேதியுடன் காலவதியாகிறது.

டிக்டாக் தளத்தை வாங்க அதை நிர்வகிக்கும் பைடான்ஸ் நிறுவனத்துக்கு பெருந்தொகையைக் கொடுக்க ஒரு குழு தயாராக இருப்பதாகத் திரு டிரம்ப் கடந்த மே மாதம் கூறினார்.

டிக்டாக் தளம் அமெரிக்காவில் மிக பிரபலம் என்று திரு டிரம்ப்புக்குத் தெரியும் என்று கால அவகாசம் நீடிக்கப்பட்டது குறித்து வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரலைன் லெவிட் கூறினார்.

“அதே வேளை அவர் அமெரிக்கர்களின் தகவல்களையும் செயலியில் உள்ள தனிப்பட்ட விவரங்களையும் திரு டிரம்ப் பாதுகாக்க விரும்புகிறார். அந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றும் அவர் நம்புகிறார்,” என்று பேச்சாளர் சொன்னார்.

அமெரிக்க அரசாங்கத்துடன் பேசி வருவதை உறுதிபடுத்திய பைடான்ஸ் நிறுவனம், முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் சீன சட்டத்தின்கீழ் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்