புதுடெல்லி: விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அறிவித்துள்ளார்.
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 50 விழுக்காடு வரி விதித்ததை அடுத்து இவ்வாறு கூறியுள்ள திரு மோடி, “இதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது தெரியும். இந்தியா அதற்குத் தயாராக இருக்கிறது,” என்றார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது,” என்றார் அவர்.
எனினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை வெளிப்படையாக பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.
பசுமைப் புரட்சியின் சிற்பி எனக் கொண்டாடப்படும் புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் அமரர் எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் மூன்று நாள் அனைத்துலகக் கருத்தரங்கில் திரு மோடி பேசினார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது மேலும் 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அமெரிக்க வணிகப் பங்காளி மீது விதிக்கப்படும் அதிகபட்ச வரியாக இது அமைகிறது.
புதிய வரி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடப்புக்கு வரும். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு தண்டனை என்று டிரம்ப் கூறினார்.
இந்த முடிவு ‘மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் இந்தியா தனது நாட்டு நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து வாங்கும் வேளாண் பொருள்களுக்கு மோடி தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால், இந்திய வேளாண் துறை கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பல்வேறு வகையான வேளாண் பொருள்களையும் பால் பொருள்களையும் ஏற்றுமதி செய்வது குறித்தும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்தும் அமெரிக்கா - இந்தியா இடையே நடந்த ஐந்து கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படவில்லை.
விவசாயப் பொருள்கள், பால் பொருள்கள், மரபணு மாற்றப்பட்ட (GM) உணவுப் பொருள்கள் மீதான வரிக் குறைப்பை இந்தியா மறுப்பது முக்கியச் சிக்கல்களில் ஒன்றாகும்.
வரிகளை நீக்குவது இந்திய விவசாயிகளை நியாயமற்ற போட்டிக்கு ஆளாக்குவதுடன், உணவுப் பாதுகாப்பைக் குறைந்த மதிப்பிற்கு உட்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்தக் கட்டண உயர்வில் நியாயமில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பொருளியல் உறவுத் துறை செயலாளர் டாமு ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எனவே இது நாடு எதிர்கொள்ளும் ஒரு தற்காலிகப் பிரச்சினை. காலப்போக்கில், உலகம் தீர்வுகளைக் காணும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள வரும் மாதங்களில் மற்ற பங்காளித்துவங்களை பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்பதற்கான அறிகுறிகளை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இது பல ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே, மோசமான அரசதந்திர மோதலுக்கு வழிவகுத்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக சீனப் பயணத்திற்குத் தயாராகி வருகிறார். மோடியின் சீனப் பயணம் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்கா இன்னும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால் மோடியின் சீனச் சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வரிகளைச் சமாளிப்பது என்பது குறித்து வளரும் நாடுகள் அமைப்பான ‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உரையாடலை தொடங்குவதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா புதன்கிழமை (ஆகஸ்ட் 6) கூறினார்.
மோடி, சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களுடன் வியாழக்கிழமை பேசத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பிரிக்ஸ் குழுவில் ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
“ஒத்த கருத்துடைய நாடுகள், அனைத்துத் தரப்புக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பையும் பொருளியல் ஈடுபாட்டையும் கண்டடையும்,” என்றார் ரவி.
ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடான சீனா மீது அமெரிக்கா இத்தகைய வரி விதிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. கணினிச் சில்லுகள், அரிய தாதுப்பொருள்கள், அதுபோன்ற மற்ற பொருள்கள் குறித்து அமெரிக்காவுடன் பேரம் பேசும் சீனா இதுவரை தப்பியுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவிடம் இத்தகைய அரிய பொருள்கள் இல்லை.

