பேங்காக்: தாய்லாந்தின் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் இயக்குநர் நாவத் இட்சாராகிரிசிஸ், 60, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நவம்பர் 21ஆம் தேதி பிரபஞ்ச அழகிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், பேங்காக் நகரில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) வருடாந்தர பட்டையணிவிக்கும் விழா நடந்தது.
அப்போது திரு நாவத், மெக்சிகோவின் பிரபஞ்ச அழகியான ஃபாத்திமா பாஸ்க்கை எல்லோர் முன்பும் ‘முட்டாள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து ஃபாத்திமாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அறையில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபஞ்ச அழகிகளும் வெளிநடப்பு செய்தனர்.
சம்பவம் தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
ஃபாத்திமா படப்பிடிப்பு ஒன்றுக்கு ஒத்துழைக்காததால் நாவத் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை (நவம்பர் 5) இரவு 74வது பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான வரவேற்பு விழா நடந்தது. அதன் தொடக்கத்தில் தொழிலதிபரான திரு நாவத் அனைவரது முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நெருக்கடியான நேரத்தில், எல்லைமீறிச் சென்றுவிட்டேன். நானும் மனிதனே, தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று 130 நாடுகளின் அழகிகள் முன்னிலையில் நாவத் தலைவணங்கினார்.

