பேங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற 74வது பிரபஞ்ச அழகிப் போட்டியில், 2025ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை மெக்சிகோவைச் சேர்ந்த ஃபாத்திமா போஷ் வென்றார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நடந்த இறுதிச்சுற்றில் தாய்லாந்து அழகி பிரவீனர் சிங்குடனும் வெனிசுலா, பிலிப்பீன்ஸ், கோட் டி’ஐவோயர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகளுடனும் திருவாட்டி ஃபாத்திமா மேடையேறினார்.
நவம்பர் 4ஆம் தேதி, தாய்லாந்து மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் இயக்குநர் நாவத் இட்சாராகிரிசிஸ், மெக்சிகோ அழகி ஃபாத்திமாவை அனைவரது முன்னிலையிலும் ‘முட்டாள்’ என அழைத்தார்.
ஃபாத்திமா படப்பிடிப்பு ஒன்றுக்கு ஒத்துழைக்காததால் நாவத் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு அதிருப்தி தெரிவித்து அவ்விடத்தைவிட்டு ஃபாத்திமா வெளியேறினார்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவ்விடத்தைவிட்டு மற்ற நாட்டு அழகிகளும் வெளியேறினர். அச்சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் 2025ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக முடிசூடினார் ஃபாத்திமா போஷ்.
போட்டியின் இறுதிச் சுற்றின்போது, மிஸ் யுனிவர்சாக பெண்களுக்குப் பாதுகாப்பான இடத்தை ஓர் பெண்ணாக எவ்வாறு உருவாக்குவீர்கள் என நடுவர் கேட்டபோது, “மற்றவர்களுக்காக அதிகாரத்தில் இருப்பவர்களிடம் குரல் கொடுப்பேன். துணிச்சலோடு எழுந்து நிற்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்,” எனத் திருவாட்டி ஃபாத்திமா கூறினார்.

