நேப்பாளத் தலைநகரில் ராணுவத்தினர் சுற்றுக்காவல்

2 mins read
இரண்டு நாள் போராட்டங்களைத் தொடர்ந்து காலவரையற்ற ஊரடங்கு
10db36da-4e8c-4f44-9314-841635c99c26
நேப்பாள ராணுவத்தினர் காத்மாண்டு வீதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 10) சுற்றுக்காவலில் ஈடுபடுகின்றனர். - படம்: இபிஏ

காத்மாண்டு: நேப்பாளத்தில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பதவி விலகுவதற்கு வித்திட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, தலைநகர் காத்மாண்டுவில் காலவரம்பற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதமேந்திய ராணுவத்தினர் புதன்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் கவச வாகனங்கள் நகரின் வீதிகளிலும் சுற்றுக்காவலில் ஈடுபட்ட நிலையில், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகளும் சந்தைகளும் மூடப்பட்டிருந்ததால் ஒருசிலர் மட்டுமே வீதிகளில் காணப்பட்டனர்.

“முதலில் நிலைமையைச் சீராக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று ராணுவப் பேச்சாளர் ராஜா ராம் பஸ்னெட் கூறினார்.

ராணுவம் அதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வியாழக்கிழமை (செப்டம்பர் 11) காலை வரை தடை உத்தரவுகள் நீடிக்கும் என்று தெரிவித்தது. போராட்டத்திற்குப் பிந்தைய நிலைமையைச் சமாளிக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் ராணுவம் கூறியது.

போராட்டக்காரர்களின் தாக்குதலில் முன்னாள் பிரதமர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தப்பவில்லை. நேப்பாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தேவுபா, அவருடைய மனைவியும் வெளியுறவு அமைச்சருமான அர்ஜு ராணா தேவுபா இருவரையும் போராட்டக்காரர்கள் தாக்குவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.

முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கானலுக்குச் சொந்தமான வீட்டையும் ஒரு கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட அவருடைய மனைவி ராஜலட்சுமி சித்ரகர், கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரவையும் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் கூடி, நேப்பாளத்தின் நிலைமை குறித்து விவாதித்தது.

நிலைமையைச் சீராக்க உதவ இந்திய வெளியுறவு அமைச்சு, உளவுத்துறை, ராணுவம் ஆகியவை நேப்பாளத்தின் உயர்மட்ட ராணுவத் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச அரசு, நேப்பாளத்துடன் எல்லையைப் பகிரும் அதன் ஏழு மாவட்டங்களிலும் காவல்துறை நிர்வாகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, காத்மாண்டு மேயரும் முன்னாள் ராப் பாடகருமான 35 வயது பாலேந்திர ஷா, இடைக்கால அரசாங்கத்தில் இளையர்களைப் பிரதிநிதிக்க அவர்களிடையே விருப்பமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

காத்மாண்டு மேயரும் முன்னாள் ராப் பாடகருமான 35 வயது பாலேந்திர ஷா (நடுவில்).
காத்மாண்டு மேயரும் முன்னாள் ராப் பாடகருமான 35 வயது பாலேந்திர ஷா (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் இவர், ஒரு கட்டமைப்புப் பொறியாளர். 2022 மேயர் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு இவர் வென்றார். இதன்மூலம், நேப்பாளத்தின் பாரம்பரிய கட்சி முறையை மீறி, அரசியல் மாற்றத்திற்கான ஓர் அடையாளமாக இவர் உருவெடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்