மலேசிய தேசிய அரசியல் கட்டமைப்பின் தூணாக 1946 முதல் திகழ்ந்து வந்த மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா), இனிமேல் செல்ல வேண்டிய திசையைப் பற்றி முடிவெடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.
மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நெடுநாளாக ஆளுங்கட்சியாக இருந்து, பின் வீழ்ந்த தேசிய முன்னணியின் தற்போதைய நிலையைப் பற்றிய அதிருப்தியால் மட்டும் ஏற்பட்ட விளைவு இதுவன்று.
தமிழில் மக்கள் கூட்டணி என அழைக்கப்படும் பக்கத்தான் ராக்யாட்டுடன் தேசிய முன்னணி 2022ல் கூட்டணி அரசில் இணைந்தது. அமைச்சரவையில் எழுவர் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் எல்லோரும் மலாய் இனத்தை முதன்மையாகப் பிரதிநிதிக்கும் அம்னோவைச் சேர்ந்தவர்கள்.
அமைச்சரவையில் இந்தியர்கள் எனக் காணும்போது முழு அமைச்சராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோபிந்த் சிங் டியோவும் துணை அமைச்சர்களாக எம்.குலசேகரன், ரமணன் ராமகிருஷ்ணன், சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மஇகாவுக்கு எஞ்சியிருப்பதோ ஒரேயொரு நாடாளுமன்ற இடம். அதில், பேரா மாநில எம்.பி. எம்.சரவணன் அங்கம் வகிக்கிறார்.
1946ல் தொடங்கப்பட்ட மஇகாவில், பிரிட்டிஷ் ஆட்சியையும் ஜப்பானிய ஆட்சியையும் எதிர்த்துப் போராடியவர்கள் சேர்ந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மலாயாவின் சுதந்திரப் போராட்டைத்தை இக்கட்சி முன்னெடுத்தது.
சுதந்திரத்திற்கான பேச்சுவாரத்தைகளில் பழம்பெரும் மஇகா தலைவர் வி.டி.சம்பந்தன் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இந்திய இனத்தவரை மலேசியக் குடிமக்களாக மாற்றும் இயக்கத்தை முன்னெடுத்தது மஇகா.
முன்னதாக, மஇகாவுக்கு 31 ஆண்டுகளுக்குத் தலைவராக அமரர் சங்கிலிமுத்து சாமிவேலு கோலோச்சிய காலத்தைக் காட்டிலும் வெகுவாக மாறுபட்டுள்ளது தற்போதை சூழல். ஆனால், இக்கட்சி மீதான அதிருப்தி அவரிடமிருந்தே தொடங்கியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியச் சமூகத்தின் நலன்களுக்காக மஇகா மேலும் அதிகம் செய்திருக்கலாம் என்ற விமர்சனம், அரசு நிறுவனமான டெலிகோம் பங்குகள் தனியார்மயமாக்கப்பட்டபோது சாமிவேலுவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பங்குகளைப் பேரளவில் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு போன்றவை விரிசல்களை ஏற்படுத்தியது.
மஇகாமீது இரும்புப்பிடி கொண்டிருந்த அமரர் சாமிவேலு, அமைச்சரவையில் இருந்துகொண்டு இதுநாள்வரை இந்தியர் என்ற வார்த்தையைச் சொல்லவே இல்லை என்ற மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதின் கூற்று நினைவுகூரத்தக்கது.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பழைய ஆலயங்கள் சிலவற்றை அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கிய செயல், இந்தியச் சமூகத்தை மேலும் சினப்படுத்தி 2007ல் ‘ஹின்ட்ராஃப்ட்’ அமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டது. முக்கிய முடிவுகள் குறித்து சக உறுப்பினர்களை அணுகாமல் தன்னிச்சையாகச் செயல்படும் அம்னோவின் போக்கும் மஇகாவின் அதிருப்திக்கு மற்றொரு காரணம் என்று சில தரப்புகள் கூறுகின்றன.
மலேசிய இந்தியச் சமூகத்திற்கு மஇகா இனி என்ன செய்யப் போகிறது என்பதற்கான பதில்தான் இக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமைப் பிரச்சினை என தீர்வு தேவைப்படும் விவகாரங்களை முன்வைப்பதற்குத் தளம் தேவைப்படும் நிலையில், தங்கள் குரல் ஒலிக்காத கூட்டணியில் தொடர்ந்து இருப்பதில் என்ன பயன் என்பதையும் மஇகா கேட்கிறது.
விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா, கூட்டணியிலிருந்து விலகியதன் மூலம் அரசாங்க நிலைப்பாடு எதுவாய் இருப்பினும் இக்கட்சி இந்தியச் சமூகத்தை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதைக் காட்டுகிறது.
இந்தியச் சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்கான தளம் எதுவாக இருந்தாலும், மஇகா அதனைத் தேடிச் செல்லும் என்பது புலப்படுகிறது. வேறு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து குரலாகத் திகழுமா, அல்லது புதுப்பிக்கப்பட்ட அடையாளத்துடன் நம்பிக்கைக் கூட்டணியில் சேருமா என்பதைப் பொறுத்திருந்து காணவேண்டும்.

