ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடைபெற்ற சந்திப்பு, மாபெரும் வெற்றி எனக் கூறியிருக்கிறார். 1 முதல் 10 வரை உள்ள அளவுகோலில், தாம் அந்தச் சந்திப்புக்கு ‘12’ கொடுப்பதாக அவர் சொன்னார்.
இரு தரப்பினரும் அரிய கனிம வளங்கள், சோயாபீன்ஸ், வீரியமிக்க ஃபென்டனைல் மருந்துப்பொருள்கள் போன்றவை மீதான வரிகள் ஆகியவற்றில் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டினர்.
சீனா மீதான வரிகள் 57 விழுக்காட்டிலிருந்து 47 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என்றும் திரு டிரம்ப் கூறினார். வரி தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
தென்கொரியாவின் பூசான் துறைமுக நகரில் உள்ள கிம்ஹே ஆகாயப்படைத் தளத்தில் தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர். சந்திப்பு ஏறக்குறைய ஒன்றே முக்கால் மணி நேரம் நீடித்தது.
அடுத்த ஆண்டு (2026) ஏப்ரலில் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்கா ஃபென்டனைல் கட்டணங்களை 20 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கும். அதே நேரத்தில் சீனாவும் சோயா பீன்ஸ் வாங்குவதை உடனடியாக மீண்டும் தொடங்கும்.
அனைத்து அரிய கனிம வளப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இனி எந்தத் தடைகளும் இல்லாமல் இருப்பதாகவும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் கூறினார். இது ஓர் ஆண்டு ஒப்பந்தம் என்றும், அது நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சீனாவிற்கு என்விடியா சில்லுகளை விற்பனை செய்வது குறித்து திரு ஸியுடன் விவாதித்ததாகவும், உலகின் மிகப்பெரிய பகுதி மின்கடத்தி சந்தையை அணுகுவது குறித்து நிறுவனத்துடன் தொடர்ந்து உரையாடுவது பெய்ஜிங்கைப் பொறுத்தது என்றும் திரு டிரம்ப் கூறினார் என்று புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பூசானில் நடந்த விவாதங்கள் என்விடியாவின் அண்மைய பிளெக்வெல் முடுக்கிகளை சீனாவிற்கு விற்பனை செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். “நாங்கள் பிளெக்வெல் பற்றி பேசவில்லை,” என்று அவர் கூறினார்.
பூசானில் ஒப்புக்கொள்ளப்பட்டவை பற்றிய கூடுதல் விவரங்கள் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட உள்ளன. இதன் விளைவுகள் குறித்து சீனா இன்னும் அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக, பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு இருவரும் புன்னகைத்தவாறு காணப்பட்டனர்.
“உங்களை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று திரு ஸி, ஊடகங்கள் முன் திரு டிரம்பின் கைகுலுக்கியவாறு கூறினார். “உங்களை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி,” என்று திரு டிரம்ப் பதிலளித்தார்.
உலகின் இரு பெரிய பொருளியல்களுக்கு இடையில் வர்த்தகப் போரால் ஏற்பட்ட பதற்றம் உச்சத்திலிருந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கும் சீன அதிபர் ஸிக்கும் இடையிலான சந்திப்பு, அதனைத் தணிக்க உதவியிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் 2025ஆம் ஆண்டில் ஒருவருக்கொருவர் விதித்துள்ள அதிக வர்த்தகத் தடைகளைக் குறைக்க வழிவகுக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.
“உறவு தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பது முக்கியம்,” என்று திரு ஸி, திரு டிரம்பிடம் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு டிரம்பின் ஐந்து நாள் ஆசியப் பயணத்தின் கடைசி நிறுத்தமாக இந்தச் சந்திப்பு அமைந்தது. இந்தப் பயணத்தில் அவர் மலேசியாவுக்கும் ஜப்பானுக்கும் சென்றார்.

