வாஷிங்டன்: அமெரிக்க அணுவாயுதங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைப்பின் பெரும்பாலான ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1,400 ஊழியர்கள் திங்கட்கிழமையிலிருந்து (அக்டோபர் 20) வேலைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட மற்றுமொரு வாக்கெடுப்புத் தோல்வியடைந்த நிலையில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது.
அரசாங்க முடக்கம் தொடங்கி மூன்று வாரத்திற்கும் மேலாகிவிட்டது.
“ஜனநாயகக் கட்சியினரின் முடக்கத்தால் தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தின் கிட்டத்தட்ட 1,400 ஊழியர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து அகற்றப்படுகின்றனர். மக்களையும் சொத்துகளையும் பாதுகாக்க நிர்வாகத்தின் ஏறக்குறைய 400 மத்திய ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்வார்கள்,” என்று எரிசக்தித் துறையின் பேச்சாளர் ஒருவர் அறிக்கையொன்றில் கூறியிருந்தார்.
அமெரிக்காவிடம் 5,177 அணுவாயுதங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 1,770 அணுவாயுதங்கள் பயன்படுத்துவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக அனைத்துலகப் பாதுகாப்பு அமைப்பான “புல்லெட்டின் ஆஃப் தி அட்டாமிக் சைன்ட்டிஸ்ட்ஸ்” கூறுகிறது.
தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகம், கிட்டத்தட்ட 60,000 குத்தகையாளர்களை மேற்பார்வையிடுகிறது. அணுவாயுதங்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, சேவை, பாதுகாப்பு முதலியவற்றுக்கு அவர்கள் பொறுப்புவகிப்பவர்கள்.
எரிசக்தித் துறை உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை. ஆயினும் தொடக்கமாக, அணுவாயுதங்களை ஒன்றுசேர்க்கும் தளங்களிலிருந்து ஊழியர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து அனுப்பப்படுவர் என்று சிஎன்என் ஊடகம் தெரிவித்தது. டெக்சசில் உள்ள பேன்ட்டக்ஸ், டென்னிசியில் இருக்கும் ஒய்-12 முதலியவை அவற்றுள் அடங்கும்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப், அரசாங்கம் மீண்டும் செயல்படுவதற்குக் குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து ஆதரவாக வாக்களிக்குமாறு ஜனநாயகக் கட்சியினரை நெருக்கிவருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்கான தீர்மானம் செனட்டில் 11ஆவது முறையாகத் திங்கட்கிழமை (அக்டோபர் 20) தோல்விகண்டது.
முடக்கம் முடியும்வரை நாடாளுமன்றம் மூடிவைக்கப்படும் என்பதில் மன்ற நாயகர் மைக் ஜான்சன் உறுதியுடன் இருக்கிறார்.
சென்ற மாதம் (செப்டம்பர் 2025) 19க்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.
“அரசாங்கம் முடங்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்க மக்களுக்கு ஆபத்தே,” என்றார் திரு ஜான்சன்.
அணுவாயுதப் போட்டாப்போட்டியில் அமெரிக்கா பின்தங்கினால் நாட்டுக்கு அது மிகவும் ஆபத்தாக முடியும் என்று அவர் எச்சரித்தார்.