கோலாலம்பூர்: வருங்காலத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கான மேம்பாட்டுப் பணிகள் பொதுப் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040க்குக்கீழ் (பிடிகேஎல்40) அப்பணிகள் இடம்பெறும் என திரு அன்வார் குறிப்பிட்டதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறை மாற்றத்துக்குத் தோதான, போக்குவரத்து அமைச்சின்கீழ் வரும் புதிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) திட்டம் அவற்றில் அடங்கும்.
“இந்த உள்ளூர் திட்டத்தில் தனியார் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது, பொதுப் போக்குவரத்துக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். பெரும்பாலோரின் விருப்பத்துக்கேற்பத்தான் நாங்கள் முடிவெடுக்கிறோம்,” என்று பிடிகேஎல்40 வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு அன்வார் கூறினார். சேராஸ் பகுதியில் உள்ள டிபிகேஎல் கழகத்தில் (Latihan Dewan Bandaraya Kuala Lumpur) அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
“அதனால்தான் அடையாளம் காணப்பட்டுள்ள, எம்ஆர்டி போன்ற போக்குவரத்து அமைச்சின்கீழ் வரும் திட்டங்களை நகரின் முதுகெலும்பாக விளங்கச் செய்வது எண்ணம் என்று நான் சென்னேன். இந்த ஏற்பாடு எல்லோருக்கும் வசதியானதாக இருக்கும்,” என்று திரு அன்வார் விவரித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய கோலாலம்பூர் மேயர் மைமுனா முகம்மது ஷரிஃப், 2040ஆம் ஆண்டுக்குள் 70 விழுக்காட்டினர் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வைப்பது பிடிகேஎல்40 திட்டத்தின் இலக்கு என்றார். போக்குவரத்துப் பெருந்திட்டம், பாதசாரி மற்றும் சைக்கிளோட்டப் பாதைகள் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பிடிகேஎல்40 திட்டத்தின்கீழ் வரும் எல்லா புதிய வீடமைப்புத் திட்டங்களிலும் சூரியசக்தி அம்சம் இடம்பெறவேண்டும் என்று திரு அன்வார் தெரிவித்தார்.
“இது நமது விதிமுறைகளிலோ சட்டங்களிலோ இதுவரை இடம்பெறாத நிபந்தனையாகும். நமது நகரம் நீடித்து நிலைக்க இது உறுதுணையாக இருக்கும்,” என்று திரு அன்வார் விளக்கினார்.
பிடிகேஎல்40, கடந்த மே மாதம் அரசாங்கத்தின் அதிகாரபூர்வப் பதிவுகளில் சேர்க்கப்பட்டது. இம்மாதம் 11ஆம் தேதி திட்டம் நடப்புக்கு வந்தது.