கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது நாடாளுமன்றம் திங்கட்கிழமையிலிருந்து (ஜூலை 21) ஆகஸ்ட் 28 வரை கூடுகிறது.
நாடாளுமனற அமர்வின்போது 13வது மலேசிய வளர்ச்சித் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது மலேசிய வளர்ச்சித் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம், நாடாளுமன்ற அமர்வின் இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்வார் என்று மலேசிய நாடாளுமன்ற நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியா எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதை இந்த 13வது மலேசிய வளர்ச்சித் திட்டம் நிர்ணயிக்கும்.
மலேசியர்களின் பொருளாதார வளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.
சம்பள உயர்வு, அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலைத்தன்மைமிக்க பொருளியல் சீர்திருத்தம், ஆட்சித் திறனை வலுப்படுத்துவது, அரசாங்க சேவை செயலாக்கத்தைத் துரிதப்படுத்துவது ஆகியவை மூலம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, வட்டார நீதித்துறை, மனிதவள மேம்பாடு, உலகளாவிய நிலையில் மலேசியாவின் போட்டித்தன்மையை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
13வது மலேசிய வளர்ச்சித் திட்டத்தைப் பற்றிய கலந்துரையாடல் மட்டுமன்றி, 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லியும் செத்தியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமதுவும் தங்கள் அமைச்சரவைப் பதவியிலிருந்து விலகிவிட்டதால் அவர்கள் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

