தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய ராணுவ விமான விபத்து: விமானிகள் உயிர் தப்பினர்

2 mins read
5e18fb08-1091-4891-8f3c-92f71de972a4
போர் விமானத்தின் சிதைந்த பாகங்களைப் பார்வையிடுகிறார் மலேசியக் குடியரசு விமானப் படையின் தலைவர் நோரஸ்லான் அரிஸ். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

கோலாலம்பூர்: மலேசியாவின் பாஹாங்கில் உள்ள ராணுவத் தளத்தில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

வியாழக்கிழமை இரவு (ஆகஸ்ட் 21) விமானம் புறப்படும்போது வெடித்து தீப்பொறி பறந்தது.

அதில் இருந்த விமானிகள், விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பே உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் பற்றி வெள்ளிக்கிழமை விவரமளித்த மலேசிய அரச விமானப் படையின் தளபதி ஜெனரல் முஹமட் நோரஸ்லான் அரிஸ், “விமானி, துணை விமானி ஆகிய இருவரும் அவசரமாக வெளியேறும் நடைமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி விமானம் விழுந்து நொறுங்குவதற்குள் வெளியேறினர்,” என்றார்.

சுல்தான் ஹாஜி அஹமட் ஷா விமான நிலையத்தில் இரவு 9.05 மணியளவில் ‘எஃப்/ஏ-18டி ஹோர்நெட்’ விமானப் புறப்பட்டபோது தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையையே ராணுவத் தளமும் பயன்படுத்தி வருகிறது.

1997ஆம் ஆண்டில் ‘எஃப்/ஏ-18டி ஹோர்நெட்’ ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தத் தொடங்கியதிலிருந்து இத்தகைய விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதல் முறை என நம்பப்படுவதாக மலேசிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

பிரதமர் அன்வார் இப்ராகிம் விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அது மட்டுமல்லாமல், அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

“காயமடைந்த இரு நபர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் பிரதமர் அன்வார் கூறியிருந்தார்.

வழக்கமான இரவு நேர பயிற்சியை மேற்கொள்ளும்போது விமானம் விபத்துக்குள்ளானதாக ஜெனரல் முகம்மது நோரஸ்லான் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு பறப்பதைக் காண முடிந்தது.

அதன் விமானியான மேஜர் முகம்மது அஸார் அலாங் கமாருதினுக்கு, 34, பின்பக்கத்தில் காயம் ஏற்பட்டது. அவரது இடது குதிகாலில் ஒரு விழுக்காடு அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அவருடன் இருந்த துணை விமானியான 28 வயது முகம்மது இஸ்ஸுடீன் முகம்மது சாலேவுக்கு உடலில் பல இடங்களில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.

இருவரும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாளே ஆகஸ்ட் 22ஆம் விடிகாலை விடுவிக்கப்பட்டனர்.

தற்போது இருவரும் மலேசிய ஆயுதப்படை மருத்துவமனையில் குணமடைந்து வருகின்றனர்.

அவசரகால வெளியேற்று முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி விமானிகள் தப்பினர் என்று ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது நோரஸ்லான் அரிஸ் கூறினார்.
அவசரகால வெளியேற்று முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி விமானிகள் தப்பினர் என்று ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது நோரஸ்லான் அரிஸ் கூறினார். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்