தமக்கு எதிராக சிவில் வழக்கை நிறுத்திவைக்கக் கோரும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் விண்ணப்பத்தை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது
கடந்த 2018ஆம் ஆண்டில் தாம் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக அன்வாரின் முன்னாள் உதவியாளர் அவர்மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றக் குழு திங்கட்கிழமை (ஜூலை 21) விசாரணை நிறுத்திவைக்க ஒருமனதாக முடிவெடுத்தது.
முந்தைய நடத்தையின் அடிப்படையில் பிரதமர் மீது வழக்கு தொடர முடியுமா என்பது குறித்த அன்வரின் மற்றொரு விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் ஜூன் 2025இல் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மற்றொரு மேல்முறையீடு செய்கிறார். மேல்முறையீட்டு தேதி செப்டம்பர் 2ஆம் தேதி நிர்ணயிக்கப்படும்.
வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான உறவு, அதிகார துஷ்பிரயோக புகார்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட திரு அன்வாருக்கு இது ஒரு வெற்றியாக அமைந்துள்ளது. அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுப்பதுடன் அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறினார்.
திரு அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளரான திரு யூசோஃப் ராவுத்தர், கோலாலம்பூரில் உள்ள திரு அன்வாரின் இல்லத்தில் 2018 அக்டோபரில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக 2021ல் அன்வார் மீது வழக்குப் பதிந்தார்.
2022ல் பிரதமரான அன்வார், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார். திரு யூசோஃப் சிறப்பு, பொது, முன்மாதிரியான நஷ்டஈட்டைக் கோருகிறார்.
திரு அன்வாரின் வழக்கறிஞரான ஆலன் வோங், மேல்முறையீடு செய்யப்படுவதற்கு முன்பு வழக்கு தொடர்ந்தால், திரு அன்வார் அரசாங்கச் செயல்பாடுகளிலிருந்து விலக்கப்பட்டு, பாதகமான அரசியல் உள்நோக்கங்களுக்கு ஆளாக்கப்பட்டு, நிறுவன ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கைத் தொடர அனுமதிப்பது பிரதமராகத் தமது கடமைகளை நிறைவேற்றும் தமது திறனைப் பாதிக்குமா என்றும் அதிகாரங்களைப் பிரிக்கும் அரசியலமைப்புச் கோட்பாட்டின் மாண்பைக் குறைக்குமா என்பதை கூட்டரசு நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று திரு அன்வார் கோரியுள்ளார்.

