செபாங், சிலாங்கூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஈராண்டுக்குப் பின் விரைவு ரயில் சேவை மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியுள்ளது.
ஒரே நேரத்தில் 270 பயணிகள் வரை ஏற்றிச்செல்லக்கூடிய ரயிலால் முக்கிய முனையத்துக்கும் மற்ற கட்டடத்துக்குமான பயண நேரம் 3 நிமிடங்களுக்குக் குறைகிறது.
பேருந்துச் சேவையை விட ரயில் சேவை மிகவும் சௌகரியமாக இருப்பதாகப் பயணிகள் குறிப்பிட்டனர்.
ரயில் சேவை மீண்டும் வந்துவிட்டதால் விமான நிலையத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இன்னும் எளிதாகச் சென்றுவர முடிவதாகவும் அவர்கள் கூறினர்.
பலமுறை ஏற்பட்ட கோளாறுகளால் சேவைத் தடங்கலை எதிர்கொண்ட விரைவு ரயில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதற்குப் பதிலாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்துச் சேவைகள் நிறுவப்பட்டன.
தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கிய ரயிலில் பயணம் செய்த முதல் சில பயணிகளில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் ஒருவர்.
“அருமையாக, துரிதமாக இருக்கிறது. முன்பைவிட இன்னும் துரிதமாக இருக்கிறது,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு அன்வாருடன் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் திரு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் ஆகியோரும் வந்தனர்.
பிரதமராக திரு அன்வார் இத்தாலிக்கு முதல் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். அவர் ரோம், பாரிஸ் ஆகியவற்றுக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.