புக்கிட் மெர்த்தாஜாம்: மலேசியா, அனைத்துலக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் சூழல்களில், சுதந்திரமான, அரசுரிமை கொண்ட நாடு என்பதைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். சக்திவாய்ந்த எந்தவொரு நாட்டுக்கும் வளைந்துகொடுக்காமல் மலேசியா இயங்கும் என்றார் அவர்.
அமெரிக்கா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் வர்த்தக, முதலீட்டு உறவுகளைக் கட்டிக்காக்க அத்தகைய நிலைப்பாடு உதவுகிறது என்று திரு அன்வார் சொன்னார். நாட்டின் பொருளியலுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அவ்வாறு செயல்படுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
“அமெரிக்காவுடன் மலேசியாவுக்கு நல்லுறவு நிலவுகிறது. உதாரணத்திற்கு 47வது ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டோம். அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சு நடத்தினோம். உடனே நாங்கள் அமெரிக்காவுக்குத் தலைவணங்கியதைப் போன்று குறைகூறப்பட்டோம்,” என்று திரு அன்வார் சொன்னார்.
“ஜி20 அமைப்புக்குத் தலைமை வகிக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவையும் அழைத்திருந்தேன். அதிபர் டிரம்ப், ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொள்வதற்குத் தடை விதித்துள்ளார். ஆனால் நான் பங்கேற்பேன். காரணம், மலேசியா சுதந்திரமான, அரசுரிமை கொண்ட நாடு. அமெரிக்காவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டிருந்தால் நாங்களும் அங்குப் போகவேண்டாம் என்று முடிவெடுத்திருப்போம்,” என்றார் மலேசியப் பிரதமர்.
பட்டர்வொர்த்தில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஜுரு-சுங்கை துவா சாலைக் கட்டண முகப்புப் போக்குவரத்துச் சீரமைப்புத் திட்டத்தின் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அமெரிக்காவுடன் இருவழி வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதை அது எந்தவிதத்திலும் தடுக்காது என்று அவர் கூறினார்.
அரிய வகைக் கனிமவளத் துறைக்கும் அது பொருந்தும் என்றார் நிதியமைச்சருமான திரு அன்வார்.
“அரிய வகைக் கனிமங்கள் தொடர்பான உடன்பாடு அமெரிக்காவுடன் மட்டும்தான் என்று சிலர் கூறுகின்றனர். அது முற்றிலும் தவறானது. அரிய வகைக் கனிமவளச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை பாகாங்கில் ஆஸ்திரேலியாவும் பேராக்கில் சீனாவும் முதலீடு செய்கின்றன. எனவே எதற்கும் அறவே கட்டுப்பாடு இல்லை,” என்று திரு அன்வார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஓர் உடன்பாட்டைப் பார்க்கும்போது எந்தெந்த அம்சங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதும் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன என்பதும் கருத்தில் கொள்ளப்படும் என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.

