பேருந்து இருக்கைப் பாதுகாப்பு வார் அணிந்துகொள்ளுமாறு சுற்றுப்பயணிகளிடம் மலேசியா வலியுறுத்தல்

1 mins read
940bdb28-38fb-468c-9270-64e5a0936638
மலேசியாவில் பேருந்தில் பயணம் செய்யும்போது இருக்கைப் பாதுகாப்பு வார் அணிந்துகொள்வது ஜூலை 1லிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - படம்: புளூம்பர்க்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இருக்கைப் பாதுகாப்பு வார் அணிந்துகொள்ளவேண்டும் என்று வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 1லிருந்து அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலருக்கு இன்னும் தெரியவில்லை என்று மலேசியப் பயணத்துறைச் சம்மேளனம் கூறியது.

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி தெரியாததாலும் வெளிநாடுகளில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் வேறுபடக்கூடும் என்பதாலும் மலேசியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மைக்கல் தெரிவித்தார்.

“சில நாடுகளில், பேருந்து இருக்கைப் பாதுகாப்பு வார் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, மலேசியாவில் பயணம் செய்யும்போது பேருந்து இருக்கைப் பாதுகாப்பு வாரைக் கட்டாயம் அணிந்துகொள்ளவேண்டும் என்பதை வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலர் உணர்வதில்லை. மேலும், பேருந்துகளில் இந்த விதிமுறையை வலியுறுத்தும் அறிவிப்புப் பலகைகளோ நினைவூட்டல்களோ இல்லை. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பேருந்துகளில் இருக்கைப் பாதுகாப்பு வார் அணிந்துகொள்ளாததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்,” என்று டாக்டர் ஸ்ரீ கணேஷ் கூறினார்.

பயணிகள், இருக்கைப் பாதுகாப்பு வார் அணிவதை உறுதி செய்வதில் பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப் பொறுப்பை அவர்கள் தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றார் டாக்டர் ஸ்ரீ கணேஷ்.

குறிப்புச் சொற்கள்