கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் கைரேகை, கண் அடையாளம், முக அடையாளம் ஆகிய தரவுகளைக் கொண்ட ‘எஃப்டிஐடி’ (FDID) என்னும் மின்னிலக்கக் கட்டமைப்பை அந்நாட்டு அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது.
அதுகுறித்த தகவலை மலேசிய உள்துறை அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்டது. வெளிநாட்டுப் பயணிகளை அடையாளம் காண ‘எஃப்டிஐடி’ உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
“ஒவ்வொரு பயணியும் தனித்துவ அதிகாரபூர்வ பதிவைக் கொண்டிருப்பார். இதனால் பொய்யான தகவல்களைக் கொடுக்க முடியாது. மேலும் நாட்டிற்குள் ஒரு வெளிநாட்டுப் பயணி எப்போது வந்தார், எப்போது வெளியேறினார் என்பதை எளிதில் பார்க்கமுடியும்,” என்று அமைச்சு கூறியது.
மலேசிய நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ பதிலில் இந்தத் தகவலைக் கொடுத்தது உள்துறை அமைச்சு.
மலேசியக் குடிநுழைவுச் சாவடிகளில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட ‘எஃப்டிஐடி’ போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். மேலும் அவை தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
அண்மையில், மலேசிய எல்லைகளில் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் போலியான தகவல்களைக் கொடுத்து வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், போலியான ஆவணங்கள் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) அதிகாரிகள் உதவியது வெளிச்சத்திற்கு வந்தது.
மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 18 பேர் அந்த முகமையின் அதிகாரிகள் ஆவர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே மலேசியாவிற்கு வரும் விமானப் பயணிகளின் தரவுகளை முன்கூட்டியே சரிபார்க்கவும் உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஒரு பயணி தனது பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னரே அவர் குறித்த தகவல்களைக் கட்டமைப்பின் மூலம் அதிகாரிகள் தெரிந்துகொள்ளலாம். இது இம்மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மலேசியாவிற்குச் சேவை வழங்கும் 10 விமான நிறுவனங்களுக்கு இது நடைமுறைப் படுத்தப்படும். பின்னர் அது விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் அவரவர் நாட்டிலிருந்து விமானம் ஏறுவதற்கு முன்னரே அவர்களைத் தடுக்க இது போன்ற கட்டமைப்புகள் உதவும் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.