இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள குடிமக்களை விடுவிக்க மலேசியா நெருக்குதல்

2 mins read
ee420a65-1f3e-4aba-9cbd-ef3952a85076
தடுத்துவைக்கப்பட்டோரில் 15 மலேசியர்களும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் இஸ்ரேலியத் துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியா காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச்சென்ற படகுகளை இஸ்ரேல் இடைமறித்ததைக் கண்டித்துள்ளது. மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயுதமில்லா மக்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை அது என்று கோலாலம்பூர் சாடியது. குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா (Global Sumud Flotilla) என்று அழைக்கப்படும் படகுகளை அனைத்துலக நீர்ப்பகுதியில் இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

படகுகளில் உணவும் மருத்துவப் பொருள்களும் இருந்ததாகக் கூறப்பட்டது. இஸ்ரேலின் நடவடிக்கை கடும் குறைகூறலுக்கு உள்ளாகியிருக்கிறது.

தடுத்துவைக்கப்பட்டோரில் 15 மலேசியர்களும் இருந்ததாக பெர்னாமா ஊடகம் கூறுகிறது. தடுத்து நிறுத்தப்பட்ட படகுகள், இஸ்ரேலியத் துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்டதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

“கடல்துறை, மனிதாபிமான, மனித உரிமை உள்ளிட்ட அனைத்துலகச் சட்டங்களை இஸ்ரேலின் நடவடிக்கை மீறியுள்ளது,” என்று அது குறிப்பிட்டது.

நிலைமையை அணுக்கமாய்க் கண்காணிப்பதாகக் கூறிய அமைச்சு, தேவைப்பட்டால் துணைத் தூதரக உதவி நல்கப்படும் என்றது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அதுபற்றி ஃபேஸ்புக்கில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) பதிவிட்டிருந்தார். மலேசிய, ஆசியான், அனைத்துலகத் தொண்டூழியர்களும் ஆர்வலர்களும் உடனடியாக மீட்கப்படுவதை உறுதிசெய்யத் தமது குழு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி வருவதாக அவர் சொன்னார்.

படகுகளின் மூலம் வழங்கப்படும் உதவியைப் பாலஸ்தீனர்களுக்கான ‘ஒருமைப்பாடு, நம்பிக்கையின் சின்னம்’ என்று இதற்கு முன்னர் மலேசியப் பிரதமர் வருணித்திருந்தார்.

“இஸ்ரேல் மனிதாபிமான உதவிப்பொருள்களைத் தடுத்துநிறுத்தியதன் மூலம் பாலஸ்தீனர்களின் உரிமையை மட்டுமல்லாது உலகின் மனச்சாட்சியையும் நசுக்கியுள்ளது,” என்றார் அவர்.

மலேசியர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிசெய்ய அரசாங்கம் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

40க்கும் மேற்பட்ட படகுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் காஸா நோக்கிச் செல்கின்றனர். பாலஸ்தீனர்களுக்கான ஒருமித்த ஆதரவை உலகிற்குக் காட்டும் நோக்கத்துடன் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்