சீனாவைச் சேர்ந்த மாணவர்களை மலேசியா ஈர்க்கக்கூடும்

2 mins read
dfc43e2b-634d-47a4-a957-1c604e1b4b93
மலேசியாவில் பல்கலைக்கழகக் கட்டணம் கட்டுப்படியான விலையில் உள்ளதாகவும் உலகளாவியத் தரவரிசையில் நல்ல இடத்தில் உள்ளதாகவும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயிலும் சீனாவைச் சேர்ந்த திரு பெய் சீ (இடது). - படம்: தி ஸ்டார்

ஜார்ஜ்டவுன்: அமெரிக்காவில் கல்வி பயில திட்டமிட்டுள்ள சீன மாணவர்களுக்கான விசாவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக்கியிருப்பதை அடுத்து, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவர்கள் பயிலக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைக் காட்டிலும் மலேசியாவில் கல்வி பயில கூடுதல் சீன மாணவர்கள் பரிசீலித்து வருவதாக சீனாவைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியரான 42 வயது திரு பெய் சி கூறினார்.

இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டக் கல்வி பயில்கிறார்.

தமக்குத் தெரிந்த மாணவர்களில் ஒருவர் அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும் அது அவருக்கு இன்னும் கிடைக்காததால் மலேசியாவில் கல்வி பயில அவர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் திரு பெய் தெரிவித்தார்.

தமது தாயாருடன் மலேசியாவின் பினாங்கு மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது அதன் பாதுகாப்பு, வாழ்வியல் முறை தங்களைக் கவர்ந்ததாகத் திரு பெய் கூறினார்.

“மலேசியாவின் பொதுப் பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கவலை சீனாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இருந்தது. ஆனால் மலேசியாவில் பல்கலைக்கழகக் கட்டணம் கட்டுப்படியான விலையில் உள்ளது. அதுமட்டுமல்லாது, உலகளாவிய தரவரிசையில் நல்ல இடத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மலேசியாவில் கல்வி பயில விண்ணப்பம் செய்கின்றனர்,” என்றார் திரு பெய்.

“மலேசியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பாடத்திட்டம், ஆய்வு, உலகளாவிய தரவரிசை ஆகியவற்றை மேம்படுத்த மலேசியா முயற்சி மேற்கொள்கிறது,” என்று திரு பெய் கூறினார்.

சீனாவைச் சேர்ந்த சில மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று மே 28ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ தெரிவித்தார்.

2023-2024 கல்விப் பருவத்தில் அமெரிக்கக் கல்விக் கழகங்களில் 270,000 சீன மாணவர்கள் சேர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்