கோலாலம்பூர்: பல்வேறு நிதி நிலையங்கள் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சிக்கான தங்களின் முன்னுரைப்புகளை உயர்த்தியுள்ள நிலையில் அந்நாடு தென்கிழக்காசியாவில் இரண்டாவது ஆக வேகமாக வளரும் பொருளியலாக உருவெடுத்து வருவதாக நம்பப்படுகிறது.
ஆக அண்மையில் எச்எஸ்பிசி வங்கி, இவ்வாண்டுக்கான மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி விகிதத்தை 4.2 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காட்டுக்கு உயர்த்தியதாக உள்ளூர் ஊடகங்கள் கடந்த வாரம் தெரிவித்தன.
அரசதந்திர முயற்சிகளில் மலேசியாவின் முயற்சிகளை எச்எஸ்பிசி சுட்டிக்காட்டியது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் சந்திப்பின்போது மலேசியாவின் நடுநிலையான அணுகுமுறை, முக்கிய வர்த்தகப் பங்காளிகளை ஒரே மேடையில் பேச்சுவார்த்தை நடத்த வகைசெய்ததை எச்எஸ்பிசி சுட்டியது என நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 17) குறிப்பிட்டது.
“எதிர்பார்க்கப்பட்டதைவிட பதிவான வெளிப்பாடு, நிலையற்ற வர்த்தகச் சூழல் தணிந்திருப்பது, உள்நாட்டில் காணப்படும் மீள்திறன் ஆகிய காரணங்களினால் நாங்கள் 2025ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித முன்னுரைப்பை 4.2லிருந்து ஐந்து விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளோம்,” என்று எச்எஸ்பிசி ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“அப்படியென்றால் அநேகமாக மலேசியா, இந்தோனீசியாவுக்கு நிகராகவும் வியட்னாமுக்கு அடுத்த நிலையிலும் ஆசியானின் இரண்டாவது ஆக வேகமாக வளரும் பொருளியலாக விளங்கும்,” என்றும் அது குறிப்பிட்டது.
மற்ற வங்கிகளும் முன்னுரைப்பை அதிகரித்துள்ளன. மேபேங்க், இவ்வாண்டுக்கான மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 4.2லிருந்து 4.7 விழுக்காட்டுக்கு உயர்த்தியது. அதேபோல், 2026ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பையும் 4.1லிருந்து 4.5 விழுக்காட்டுக்கு உயர்த்தியது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், இவ்வாண்டுக்கான முன்னுரைப்பை 4.2லிருந்து 4.7 விழுக்காட்டுக்கு உயர்த்தியது.

