புத்ராஜெயா: மலேசியாவில் சட்டத்துறை நியமனங்களும் அத்துறையில் அவரவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதும் அரசியலைப்பு சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே இடம்பெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இது, நீதிபதிகளுக்கு மட்டுமின்றி ஓய்வுக்காலத்தை நெருங்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலமைப்பைப் புரிந்துகொண்டவர்களுக்கு அதன் நடைமுறைகள் தெரியும். குழு ஒன்று உள்ளது, பிரதமரும் இருக்கிறார், மன்னரும் இருக்கிறார். நியமனங்கள் குறித்து மன்னர்கள் குழுவில் (Conference of Rulers) கலந்தாலோசிக்கப்படும். அனைத்தும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இடம்பெறும்.
“ஓய்வுக்காலத்தை நெருங்கும் எல்லா அதிகாரிகளும் நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும். சேவைக் காலம் நீட்டிக்கப்படுவது உறுதியல்ல. எனினும், இது இப்போது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சேவைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதை எதிர்த்தும் சில தரப்புகள் குரல் எழுப்புகின்றன,” என்று மாதந்தோறும் பிரதமர் அலுவலகத்தில் நடந்துவரும் தமது ஊழியர்களுடனான சந்திப்பில் திரு அன்வார் குறிப்பிட்டார்.
மலேசிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் துங்கு மைமுன் துயாவ் மட் வரும் புதன்கிழமை (ஜூலை 2) ஓய்வுபெறவுள்ளார். அவரின் வயது 66. அதுவே மலேசியாவில் நீதிபதிகள் ஓய்வுபெறுவதற்கான கட்டாய வயதாகும்.
அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன. எனினும், அதுகுறித்து அரசாங்கம் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
மலேசிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 125(1)இன்கீழ் மன்னரின் அனுமதியுடன் ஓய்வுபெறும் நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக், சையது சாதிக் அப்துல் ரகுமான் ஆகியோரின் வழக்குகளில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் குறித்தும் திரு அன்வார் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோன்ற வழக்குகளில் அரசாங்கத் தலையீட்டு இருப்பதாகப் பொதுமக்களிடையே கருத்து நிலவுவதையடுத்து அவர் விளக்கமளித்தார். நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவது இல்லை என்றும் அரசாங்க விவகாரங்கள் தொடர்பாக தவிர தாம் மூத்த நீதிபதிகளைச் சந்திப்பதில்லை என்றும் திரு அன்வார் விளக்கினார்.