குளுவாங்: ஜோகூர் பாருவுக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான மின்சார ரயில் சேவை வரும் டிசம்பர் 12ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார்.
இச்சேவையை மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் டிசம்பர் 11ஆம் தேதி ஜோகூர் பாருவில் தொடங்கி வைப்பார்.
அதற்கு மறுநாள் புதிய மின்சார ரயில் சேவை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
“முதலில் இச்சேவை கோலாலம்பூர் வரை வழங்கப்படும். பின்னர் பாடாங் பசார், பட்டர்வொர்த் உள்ளிட்ட தொலைவில் உள்ள பகுதிகளுக்கு அச்சேவை கட்டங்கட்டமாக நீட்டிக்கப்படும்.
“அதிக தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு இந்த ரயில் நாளில் ஒருமுறை மட்டும்தான் போய் வர முடியும். ஜோகூர் பாரு - கோலாலம்பூர் போன்ற அருகருகே இருக்கும் பகுதிகளுக்கிடையே கூடுதல் ரயில் சேவைகளை வழங்க முடியும்,” என்று திரு லோக் தெரிவித்தார்.
குளுவாங் நகரில் உள்ள மாஸ்கோட்டா ரயில் பூங்காவில் சனிக்கிழமை (நவம்பர் 22) நடந்த குளுவாங் ரயில் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிறகு திரு லோக் செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல்களை வெளியிட்டார்.
ஜோகூர் பாருவிலிருந்து மலேசியாவின் வடக்குப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், சேவை மாறிக்கொண்டு அப்பகுதிகளுக்குச் செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பலதரப்பினரும் நீண்டகாலமாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கெமாஸ்-ஜோகூர் பாரு இரட்டைத் தட மின்சார ரயில் திட்டம் 99.4 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாக ஜோகூர் வேலைப்பாடு போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாத இறுதிக்குள் அந்தத் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
செகாமட், குளுவாங், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 192 கிலோமீட்டர் பாதையில் மின்சார ரயில் சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மின்சார ரயில் திட்டம் தொடர்பான கட்டுமானப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தன.

