ஜோகூர் பாரு: இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் குப்பை போடுபவர்களுக்கு எதிராக 1,000க்கு அதிகமான அமலாக்க நடவடிக்கைகளை ஜோகூர் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் குப்பை போட்ட குற்றத்திற்காக 161,500 ரிங்கிட் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஜோகூர் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் குப்பை போடுவதற்கு எதிரான சில சட்டங்களை இயக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
“தற்போதுள்ள சட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்யவும் மாநிலத்தில் எவ்வாறு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது,” என்று ஜோகூர் மாநில வீடமைப்பு மற்றும் அரசாங்க மன்றத்தின் தலைவர் முகம்மது ஜாப்னி சுக்கோர் தெரிவித்தார்.
“ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், பொது இடங்கள், ஆற்றுப் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்,” என்று ஜாப்னி சுக்கோர் கூறினார்.
பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் அது சுற்றுச் சூழலுக்குக் கேடு ஏற்படுத்தும், மேலும் அது அரசாங்க செலவுகளை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நகரப் பகுதிகள் மட்டுமில்லாது கிராமப் பகுதிகளிலும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிலரின் அலட்சிய நடவடிக்கையால் அரசாங்க நிதி தேவை இல்லாமல் செலவு செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 150 வெள்ளி (500 ரிங்கிட்) வரை அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.