இஸ்கந்தர் புத்ரி: எதிர்வரும் ஆண்டுகளில் போதுமான அளவுக்குச் சுத்தமான குடிநீர் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மேலும் இரண்டு தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை மலேசியாவின் ஜோகூர் மாநிலம் கட்டுகிறது.
இதற்கான செலவு 184 மில்லியன் ரிங்கிட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் செமான்கார் ஆலை எல்ஆர்ஏ அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று ஜோகூரின் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபாஸில் முகம்மது சாலே தெரிவித்தார்.
அந்த ஆலையின் கொள்ளளவு ஒருநாளுக்கு 50 மில்லியன் லிட்டர் என்றும் கூலாய், செடெனாக் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை விநியோகிக்கும் ஆற்றலை அது கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
“லாயாங் 2 எல்ஆர்ஏ ஆலை, 114 மில்லியன் செலவில் கட்டப்படுகிறது. இந்த ஆலை 2027ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் கொள்ளளவு ஒருநாளுக்கு 160 லிட்டர். ஜோகூர் பாருவுக்கும் இஸ்கந்தர் புத்ரி பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கும் ஆற்றலை அது கொண்டிருக்கும்,” என்று புதன்கிழமையன்று (நவம்பர் 19) ஜோகூர் சட்டமன்றத்தில் திரு முகம்மது ஃபாஸில் தெரிவித்தார்.
இந்த இரண்டு ஆலைகளிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் மூலம் ஜோகூர் பாரு, கூலாய், பொந்தியான் ஆகிய இடங்கள் பலனடையும் என்றார் அவர்.
இரு ஆலைகளும் நாளுக்கு 290 லிட்டர் தண்ணீரை விநியோகிக்கும்.
நீர் வளம், ஜோகூரில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் ஆகியவை தொடர்பான திட்டங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் திரு முகம்மது ஃபாஸில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகரித்து வரும் ஜோகூர் மக்கள்தொகை, மாநிலத் தொழிற்துறை மேம்பாடு, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் போன்ற உத்திபூர்வத் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக ஜோகூரில் சுத்திகரிக்கப்படும் தண்ணீருக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

