தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதர்-யானை மோதலைத் தடுக்க ஜோகூர் நடவடிக்கை

2 mins read
6187634a-9c5f-4afb-91a6-852f6a206167
யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வராமல் இருக்க இவ்வாண்டு மட்டும் கிட்டத்தட்ட 17 யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள காடுகளில் அவ்வப்போது யானைகளை மனிதர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

இதில் சிலமுறை மனிதர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இச்சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது.

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் நடக்கும் சந்திப்புகளைத் தடுக்கும் விதமாகச் சில பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வேலை ஆள்கள் தோட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஆளில்லா வானூர்திமூலம் தோட்டங்களில் யானைகள் கூட்டம் ஏதேனும் உள்ளதா என்பதைச் சோதிக்கின்றனர். அதன்பின்னர் வேலைக்குச் செல்கின்றனர்.

“ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது யானைக் குட்டிகளைத் தோட்டங்களில் பார்க்க நேரிடுகிறது,” என்கிறார் ஜோகூர் வாழைத் தோட்டத்தில் வேலை செய்யும் இந்தோனீசிய ஊழியர் சிலாமத்.

ஒரு சிறிய யானைகூட பெரிய அளவில் தோட்டத்தைப் பாதிக்கும் என்பதால் அவற்றை விரட்ட வேண்டியுள்ளது என்கிறார் சிலாமத்.

2024ஆம் ஆண்டில் மட்டும் யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து சேதம் செய்த சம்பவங்களின் எண்ணிக்கை 253ஆகப் பதிவாகியுள்ளன. இதனால் பல மில்லியன் ரிங்கிட் நட்டமானது.

கூலாங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் தெசாரு ஆகிய வட்டாரங்களில் மனிதர்கள் யானைகளை எதிர்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகவுள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு நகர்வதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வராமல் இருக்க இவ்வாண்டு மட்டும் கிட்டத்தட்ட 17 யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

யானைகளை இடமாற்றம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவை விரைவுச் சாலைகளை நோக்கி வராமல் இருக்குமாறு பாதைகளும் அமைக்கப்பட்டுளளன.

இதுபோன்ற நடவடிக்கையால் யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவது பெரும்பாலான நேரங்களில் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்