தோக்கியோ: ஜப்பானுக்குச் செல்லும் தனது குடிமக்களை சீனா எச்சரித்திருக்கும் வேளையில் அந்த விவகாரத்தில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சீனாவை ஜப்பான் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதனை ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் சனிக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்தது.
“சீனாவிடம் ஜப்பான் தொடர்புகொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதனிடம் கடுமையாக வலியுறுத்தப்பட்டு உள்ளது,” என்று ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் மினோரு கிஹாரா கூறியதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இருப்பினும், அவரின் கருத்தை முழுமையாக அது வெளியிடவில்லை.
ஜப்பானியப் பெண் பிரதமர் சானே தகாய்ச்சி தைவான் குறித்து கடந்த வாரம் எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.
தைவானை சீனா தாக்கினால் அது உயிர்வாழ முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் நிலவரத்தை ஏற்படுத்தும் என்றும் அதில் ஜப்பான் தலையிட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்லும் சீனக் குடிமக்கள் அதுபற்றி சிந்திக்கவேண்டும் என்று சீனா எச்சரித்தது.
தைவான் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று கூறிவரும் சீனா, அந்தத் தீவை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து மாற்றுக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

