அதிகாலை 3 மணிக்கு கூட்டத்தைத் தொடங்கிய ஜப்பானியப் பிரதமர் தகாய்ச்சி

2 mins read
f95507b9-1b85-48f8-8921-744ca02d1054
ஜப்பானின் புதிய பிரதமர் திருமதி சானே தகாய்ச்சி. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகாய்ச்சி, ஓர் அயராத உழைப்பாளி என்று அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் சமூகக் கூட்டங்களைத் தவிர்ப்பவர். வேலை-வாழ்க்கைச் சமநிலை என்ற கருத்தை வெளிப்படையாக நிராகரித்தவர்.

அண்மையில் ஒருநாள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் முன்பு திருமதி தகாய்ச்சி தமது உதவியாளர்களுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்காக, அதிகாலை 3 மணிக்குப் பிறகு தோக்கியோவில் உள்ள தமது இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது அனைவரும் வியப்படைந்தனர்.

நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தை நடத்தியதற்காக திருமதி தகாய்ச்சி விமர்சனங்களை எதிர்கொண்டார். மேலும் இது ஜப்பானிய செய்தி ஊடகங்களில் ‘காலை 3 மணி ஆய்வு அமர்வு’ என்று விமர்சிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை ஜப்பானில் உணர்வுபூர்வமாகப் பார்க்கப்படுகிறது. அங்கு அண்மைய ஆண்டுகளில் ‘கரோஷி’ அல்லது ‘அதிக வேலைப் பளுவால் ஏற்படும் மரணம்’ போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

உதவியாளர்கள் பலர் பங்கேற்ற இந்தச் சந்திப்பு, சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. இது ஆரோக்கியமற்ற தீவிர நிலைக்கு வழிவகுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர். திருமதி தகாய்ச்சி தமது ஊழியர்கள் மீது தேவையற்ற சுமைகளைச் சுமத்துவதாக மற்றவர்கள் கூறுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியை வழிநடத்தும் முன்னாள் பிரதமர் திரு யோஷிஹிகோ நோடாவும், கூட்டத்தை நடத்தும் திருமதி தகாய்ச்சியின் முடிவை ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று வர்ணித்தார். 2011 முதல் 2012 வரை ஜப்பானின் பிரதமராக இருந்தபோது, ​​அவர் காலை 6 அல்லது 7 மணியளவில் வேலையைத் தொடங்குவார்.

நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய திருமதி தகாய்ச்சி, தமது அதிகாலைக் கூட்டம் தமது ஊழியர்களுக்குச் ‘சிரமத்தை ஏற்படுத்தியது’ என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில்களைத் தயாரிக்க அவ்வாறு சந்திக்க வேண்டியது அவசியம் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்