உலகின் ஆகப்பெரிய அணுசக்தி ஆலையை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கவுள்ள ஜப்பான்

1 mins read
47c61666-ba41-45c4-8645-6d86e3d957f6
நைகாட்டாவில் உள்ள கா‌ஷிவாஸாக்கி கரிவா அணுசக்தி ஆலை. - படம்: ஏஎஃப்பி

நைகாட்டா: உலகின் ஆகப்பெரிய அணுசக்தி ஆலையை மீண்டும் செயல்படுத்த அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து தாம் விரைவில் முடிவெடுக்கப்போவதாக ஜப்பானின் நைகாட்டா மாநில ஆளுநர் கூறியுள்ளார்.

அவரின் முடிவு, ஒட்டுமொத்த ஜப்பானுக்கே முக்கியமானதாக விளங்கும்.

“விரைவில் முடிவெடுத்து அதைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று திரு ஹிடேயோ ஹனாஸுமி வாரந்தோறும் நடந்துவரும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். டெப்கோ எனப்படும் தோக்கியோ மின்சக்தி நிறுவனம் நடத்தும் ஆலையை மீண்டும் செயல்படுத்துவதற்கு அவரது ஒப்புதல் மட்டும்தான் இனி தேவை.

கா‌ஷிவாஸாக்கி கரிவா எனும் அந்த ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பிறகு ஆலை முதன்முறையாகச் செயல்படும்.

டெப்கோ நடத்தும் மற்றோர் அணுசக்தி ஆலையான ஃபுக்கு‌ஷிமா டாய்ச்சி அணுசக்தி ஆலைக்கு நேரில் சென்ற மறுநாளான புதன்கிழமை (நவம்பர் 19) திரு ஹனாஸுமி செய்தியாளர்களிடம் பேசினார். இந்த ஆலைதான் 2011ஆம் ஆண்டு பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டுச் சம்பவம், அணுசக்தி ஆலைகளைப் பொறுத்தவரை 80களில் நிகழ்ந்த செர்னோபில் சம்பவத்துக்குப் பிறகு ஆக மோசமானதாகும். அப்படியிருக்கையில் கேகே என்றழைக்கப்படும் கா‌ஷிவாஸா கரிவா ஆலை மீண்டும் தொடங்கப்பட்டால் அது ஜப்பானிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.

குறிப்புச் சொற்கள்