காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குல்கள் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பேர் மாண்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) மாலை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
காஸா விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 பேர் மாண்டனர். மாண்டோரில் சிறுவர்களும் அடங்குவர்.
இந்தத் தகவலை அல் ஷிஃபா மருத்துவமனை ஊழியர்களும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அந்த விளையாட்டரங்கில் அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
தாக்குதலில் மாண்டோரின் சடலங்கள் மண்ணில் புதையுண்டதாகவும் அவற்றை மீட்க பாலஸ்தீனர்கள் வெறும் கைகள், மண்வெட்டிகளைப் பயன்படுத்தியதையும் காணொளிகள் காட்டின.
காஸாவெங்கும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 9 சிறுவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காஸாவில் உள்ள பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் ஆளில்லாத வானூர்திகள் மூலம் தாக்கியதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபாலியா நகரில் உள்ள ஒரு வீடு தகர்ந்தது. அதில் இருந்த அந்த மூன்று சிறுவர்களும் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவின் தென்கிழக்குப் பகுதியில் மேலும் ஆறு சிறுவர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பள்ளி ஒன்று தரைமட்டமானது.
அதில் அகதிகள் சிலர் தங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அது கருத்து தெரிவித்தது.
அதில் காயமடைந்தோர் தொடர்பான விவரங்கள் தனக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
ஆனால் தனது படைகளுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய சந்தேகத்துக்குரிய தனிநபர் அங்கு இருந்ததாக அது தெரிவித்தது.
இதற்கிடையே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கில் இஸ்ரேலிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நடந்துகொள்ளும் விதத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.
திரு நெட்டன்யாகு மீது 2019ஆம் ஆண்டில் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அவை அனைத்தையும் அவர் மறுத்துவிட்டார்.
மூன்று வழக்குகள் தொடர்பான வழக்கு விசாரணை 2022ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி திரு நெட்டன்யாகுவின் வழக்கறிஞர்கள் இஸ்ரேலிய நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அவர்களது விண்ணப்பத்தை இஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஹமாஸ் மற்றும் ஈரானுடன் திரு நெட்டன்யாகு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதற்கு இஸ்ரேலிய நீதித்துறை இடையூறு விளைவிப்பதாகவும் அதிபர் டிரம்ப் அதிருப்திக் குரல் ஏழுப்பியுள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கில் நிதி வழங்குவதாகவும் இத்தகைய போக்கை சகித்துக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு இருக்க, காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறும்படி அங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 29) உத்தரவிட்டது.
போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.