ஜெருசலம்: காஸாவுக்கு உதவிப் பொருள்களை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் அனைத்துலகக் கடற்பகுதியில் புதன்கிழமை (அக்டோபர் 8) தடுத்ததாகக் கூறப்படுகிறது.
அக்கப்பல்களை அனுப்பி வைத்த கூட்டமைப்பு இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் இரண்டாவது முறையாக இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஃபுளோட்டில்லா சுதந்திரக் கூட்டமைப்பு (எஃப்எஃப்சி) என்றழைக்கப்படும் இந்தக் கூட்டமைப்பு, பல்வேறு பாலஸ்தீன ஆதரவு குழுக்களை உள்ளடக்கியது. இக்கூட்டமைப்பு, இஸ்ரேலியத் தடுப்புகளைத் தாண்டி காஸாவுக்குச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
எஃப்எஃப்சியின் கப்பல்களும் அவற்றிலிருந்த பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கப்பல்களும் பயணிகளும் இஸ்ரேலியத் துறைமுகம் ஒன்றுக்கு இடம் மாற்றப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விரைவில் நாடுகடத்தப்படுவர் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“சட்டபூர்வமாக கடற்படைகள் அமைத்துள்ள தடுப்புகளை மீறி ஒரு போர்க் களத்துக்குள் நுழையும் மேலும் ஒரு பயனற்ற முயற்சி சோபிக்கவில்லை,” என்றும் அமைச்சு பதிவிட்டிருந்தது.
முன்னதாக இஸ்ரேல், குளோபல் சுமுட் ஃபுளோட்டில்லா எனும் கூட்டமைப்பின் 40 கப்பல்களைத் தடுத்து அதன் 450க்கும் மேற்பட்ட ஆர்வலர்களைத் தடுத்து வைத்தது. அந்தக் கூட்டமைப்பும் காஸாவுக்கு உதவிப் பொருள்களை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இரண்டாவது முறையாக அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தங்களின் மனிதாபிமானக் குழுக்கள் கடத்தப்பட்டதாகவும் தங்களின் கப்பல்கள் சட்டவிரோதமான முறையில் தடுக்கப்பட்டதாகவும் எஃப்எஃப்சி குற்றஞ்சாட்டியது.
“உலக நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான பணியாளர்கள், மருத்துவர்கள், செய்தியாளர்களை உள்ளடக்கிய பங்கேற்பாளர்கள் அவர்களின் விருப்பமின்றி பிடிபட்டு, நிலவரம் தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்துலகக் கடற்பகுதியில் நடவடிக்கை எடுக்க இஸ்ரேலிய ராணுவத்துக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடையாது,” என்று சொன்ன எஃப்எஃப்சி, “நமது கூட்டமைப்பால் எந்த அபாயமும் கிடையாது,” என்றும் குறிப்பிட்டது.
எஃப்எஃப்சியின் கப்பல்களில் 110,000 டாலருக்கும் (142,489 வெள்ளி) அதிக மதிப்பிலான உதவிப் பொருள்கள் இருந்தன. மருந்துகள், சுவாசிப்பதற்குத் தேவையான உதவிப் பொருள்கள், ஊட்டச்சத்து உணவு வகைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
அந்த உதவிப் பொருள்களை போதுமான உணவு இல்லாத காஸா மருத்துவமனைகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக எஃப்எஃப்சி இன்ஸ்டகிராமில் தெரிவித்தது.