காஸா சிட்டி: இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் ஆயுதப்படையின் பேச்சாளர் கொல்லப்பட்டார்.
அதுகுறித்த தகவல்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டது.
“அபு ஓபைடா என்ற அந்தப் பயங்கரவாதியை ராணுவத் தாக்குதல்மூலம் கொன்றுவிட்டோம்,” என்று இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தமது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டார்.
ஹமாஸ் போராளிகளின் முக்கியமான மூத்த உறுப்பினர்களைக் குறிவைத்து காஸாவில் கிட்டத்தட்ட 23 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.
ஹமாஸ் படையினரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அந்த அமைப்பைத் துடைத்தொழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தங்களிடம் சிக்காமல் இருக்க ஹமாஸ் போராளிகளின் முக்கியத் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அபு ஓபைடா கொல்லப்பட்டது குறித்து கருத்து ஏதும் வெளியிடவில்லை.
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து அபு ஓபைடா ராணுவ உடை அணிந்தவாறு பல தொலைக்காட்சி நேர்காணல்கள், அறிக்கை வெளியீடு, சமூக ஊடகக் காணொளிகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், காஸாவின் நகரப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர், மேலும் அவர்களின் தங்குமிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் அங்கு முழுவீச்சில் தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். முழுவீச்சில் நடத்தப்படும் தாக்குதலில் பிணைக்கைதிகள் கொல்லப்படலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது 251 பிணைக்கைதிகளை அவர்கள் காஸாவுக்குள் பிடித்துச் சென்றனர்.
பிணைக் கைதிகளில் 47 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களில் 25 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காஸாவில் 63,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

