தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலைமையைப் பொறுத்து இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தத்தை ஆதரிப்பேன்: டிரம்ப்

2 mins read
2e27fd1e-670d-476e-9b27-59ab9459286a
அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்த நிலைமையைப் பொறுத்து ஆதரவு அளிப்பேன் என்றார். - படம்: ஏஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்த ஆதரவு அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அது சூழலைப் பொறுத்து இருக்கும் என்றார் அவர்.

சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறும் வேளையில் சண்டைநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த திரு டிரம்ப், “செய்யலாம், சூழலைப் பொறுத்து அமையும்,” என்றார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை நிறுத்துவதில் ஐரோப்பாவால் பெரியளவில் உதவ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஈரானுக்கு ஐரோப்பாவிடம் பேச விருப்பமில்லை. அவர்கள் எங்களிடம் பேசத்தான் விரும்புகிறார்கள். இதில் ஐரோப்பாவால் உதவி செய்ய முடியாது,” என்று திரு டிரம்ப் சொன்னார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களை ஜூன் 20ஆம் தேதி சந்தித்துப் பேசினார். ஈரானின் அணுவாயுதத் திட்டம் குறித்து அரசதந்திர நடைமுறைக்குத் திரும்புவது பற்றி அவர்கள் கலந்துரையாடினர்.

அணுவாயுதத் திட்டம் குறித்து வா‌ஷிங்டனிடம் பேசும்படி ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் ஈரானை ஊக்குவித்தனர்.

இருப்பினும், கலந்துரையாடல் முன்னேற்றத்துக்கான அறிகுறி இன்றி முடிந்தது.

ஈரானை முறியடிக்க தரைப்படைகள் அவசியமா என்ற கேள்விக்கு அதைப் பற்றி பேசப்போவதில்லை என்று திரு டிரம்ப் கூறினார்.

ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் - ஈரான் போர் மூண்டது. அந்தப் போரில் அமெரிக்கா தலையிடுமா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கவிருப்பதாக அதிபர் டிரம்ப் இதற்குமுன் கூறினார்.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் அணுவாயுதம் வைத்திருப்பதாக நம்பப்படும் ஒரே நாடு இஸ்ரேல். ஈரான், சுயமாக அணுவாயுதங்கள் தயாரிப்பதை நிறுத்த இஸ்ரேல் அதன்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

தான் தயாரிக்கும் அணுவாயுதத் திட்டம் அமைதிப் பயன்பாட்டிற்குரியது என்ற ஈரான், இஸ்ரேல்மீது பதில் தாக்குதல் நடத்தியது.

குறிப்புச் சொற்கள்