ஜெருசலம்: அணுவாயுதக் களைவு பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தொடர்கிறது.
இஸ்ரேல் தன்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று (ஜூன் 21) இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தின.
ஈரானின் இஸ்ஃபஹான் அணு ஆலையை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்த அணு ஆலை ஈரானில் உள்ள மிகப் பெரிய அணு ஆலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்வித பொருளும் ஆலையிலிருந்து கசியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கோம் நகரில் உள்ள கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவித்தது.
அதில் 16 வயது இளையர் ஒருவர் மாண்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை (ஜூன் 21) காலை 7.30 மணி அளவில் இஸ்ரேல் மீது ஈரான் பல ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து, டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது.
ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேலியத் தற்காப்பு இடைமறித்து வானில் தகர்த்தது.
இஸ்ரேலின் தென்பகுதிகளிலும் எச்சரிக்கை மணி ஒலித்தது.
அப்பகுதியை நோக்கி ஈரான் ஐந்து ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டனவா அல்லது அவை சேதம் விளைவித்தனவா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
தாக்குதலில் காயமடைந்தோர் குறித்தும் இஸ்ரேல் தகவல் தெரிவிக்கவில்லை.