ஜெருசலம்: ஈரான்மீது நடத்திய தாக்குதல்கள் மூலம் அதன் அணுவாயுதத் திட்டத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத்தான் தள்ளிப்போட்டுள்ளதாக இஸ்ரேல் (ஜூன் 21) கூறியுள்ளது.
இஸ்ரேலிய ஆகாயப் படைகள், மத்திய ஈரானில் உள்ள ஏவுகணைக் கிடங்கு மீதும் அவை பாய்ச்சப்படும் தளங்கள் மீதும் புதிய ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்தது.
அணுவாயுதங்களை உருவாக்குவதிலிருந்து ஈரானைத் தடுக்க இஸ்ரேல் அடுக்கடுக்காகத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறியது.
“அணுகுண்டைத் தயாரிக்கும் ஈரானின் முயற்சியை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தள்ளிப்போட்டிருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ள மதிப்பீடுகள் மூலம் தெரிகிறது,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் குறிப்பிட்டார்.
ஒரு வாரம் நீடித்த இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என்று திரு சார் சூளுரைத்தார்.
“அச்சுறுத்தலைக் களைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று திரு சார் வலியுறுத்தினார்.
ஈரானிய அமைச்சர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும்படி பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்- நோவெல் பெரட் கூறினார்.
ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சர் தாக்குதல்கள் தொடரும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் துரிதமான அணுவாயுதத் திட்டம் குறித்து பல மேற்கத்திய வல்லரசுகள் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, நாட்டின் துரிதமான யுரேனிய செறிவூட்டல் பற்றி அவை கேள்வி எழுப்பின.
இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தைத் தற்காலிகமாக மூடவிருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. ஈரானில் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருந்து அதன் கடமையை நிறைவேற்றவிருப்பதாக அது சொன்னது.