டெஹ்ரான்: ஈரான், தலைநகர் டெஹ்ரானில் உள்ள வான்வெளி உள்ளிட்ட அதன் ஆகாயவெளியை மீண்டும் திறந்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் ஏற்பட்ட போரால் கடந்த மாதம் 13ஆம் தேதி ஈரான் அதன் ஆகாயவெளியை மூடியது.
“டெஹ்ரானின் மெஹ்ரபாட், இமாம் கொமெய்னி அனைத்துலக விமான நிலையங்களும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறந்துவிட்டன. அவை விமானச் சேவைகளையும் இயக்கத் தயாராகிவிட்டன,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ஃபஹான், டாப்ரிஸ் ஆகியவை தவிர உள்நாட்டு, அனைத்துலக விமானங்கள் நாடளவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் காலை 5 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சேவை வழங்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தேவையான உள்கட்டமைப்புகள் சீரானப் பிறகு இஸ்ஃபஹான், டாப்ரிஸ் ஆகிய நகரங்களில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஈரான்மீது இஸ்ரேல் கடந்த மாதம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரான் அதன் ஆகாயவெளியைக் கடந்த மாதம் மூடியது.
ஜூன் 24ஆம் தேதி ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்தது.