இந்தோனீசிய ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை வீச்சு, ஒருவர் காயம்

1 mins read
d68656e2-a1e1-4b41-8bc3-f09389b65105
அரசாங்கக் கட்டடம் முன்னால் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ள இந்தோனீசிய ஆகாயப் படை சிறப்பு வீரர்கள். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இரண்டு பல்கலைக்கழகங்களின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 2) கூறினர்.

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட அரசாங்கச் செலவினங்களை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவின.

அந்த வன்முறையில் குறைந்தபட்சம் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக இந்தோனீசிய மூத்த அமைச்சர் ஐர்லாங்கா ஹார்தார்ட்டோ இன்று கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இரு பல்கலைக்கழகங்களின் முன்பு கூட்டம் கூடியது.

ஜகார்த்தாவில் இருந்து 140 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாசுந்தான் பல்கலைக்கழகம், பண்டுங் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னால் திரண்ட கூட்டங்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் கூறினர்.

பல்கலைக்கழகங்களின் வளாகத்திற்கு வெளியே ரப்பர் தோட்டாக்களைக் காவல்துறையினர் பயன்படுத்தியபோது அதில் ஒருவர் காயமடைந்ததாக முஹம்மது இல்ஹாம் எனப்படும் மாணவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ரப்பர் தோட்டாக்களால் இருமுறை சுடப்பட்டதில் காயமடைந்த தாமும் ஒரு பல்கலைக்கழக மாணவர்தான் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவில்லை என்று காவல்துறை அதிகாரியான ஹெண்ட்ரா ரோச்மாவன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்