பாலஸ்தீனத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு; உறுதியாக உள்ள உலக நாடுகள்

2 mins read
7c9dff23-94c8-49ae-88db-371b231565cf
ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன். - படம்: இபிஏ

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நடந்த ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க முடிவெடுத்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாகக் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்குக் கொண்டுவர உலகத் தலைவர்கள் இந்த அரசதந்திர முறையைக் கையில் எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்ரேலையும் அமெரிக்காவையும் சினமூட்டலாம் என்று கூறப்படுகிறது.

பொதுச் சபையில் பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

“நாம் அமைதிக்கு வழிவிட வேண்டும், நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து இரு நாட்டுத் தீர்வு கொண்டு வரவேண்டும். இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும்,” என்று திரு மக்ரோன் கூறினார்.

அதிபர் மக்ரோனின் உரைக்குப் பலத்த கைதட்டு கிடைத்தது.

துருக்கி அதிபர் தயிப் ஏர்டோகன், கனடியப் பிரதமர் மார் கார்னே, ஐக்கியப் பொதுச் சபையின் தலைவர் ஆன்டனியோ குட்டரஸ் ஆகியோரும் கூட்டத்தில் இருந்தனர்.

அதிபர் மக்ரோனின் அறிவிப்பு பாலஸ்தீன மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது, இருப்பினும் அது காஸாவில் நடக்கும் போரில் மாற்றத்தைக் கொடுக்காது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஐக்கிய நாட்டுப் பொதுச்சபையில் 193 நாடுகள் உள்ளன. அவற்றில் 75 விழுக்காட்டு நாடுகள் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவின் புறநகர்ப் பகுதிகளில் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் பலர் கொல்லப்பட்டனர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஹமாஸ் போராளிகளை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் காஸாமீது போர் தொடுத்தது.

இஸ்ரேலிய ராணுவத்தின் கடுமையான தாக்குதல்களால் 65,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் காஸாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கைக்கு அனைத்துலக அளவில் கண்டனமும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
காஸாபோர்இஸ்‌ரேல்