வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரியாவுடனான பூசலுக்குத் தீர்வுகாணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்துலகப் பூசல்களுக்குத் தீர்வுகாண்பதற்கான தமது முயற்சிகள் பற்றி பேசிய திரு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு ஜூன் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது போல கடிதம் எழுதினாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு திரு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. “கிம் ஜோங் உன்னுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவருடன் நன்றாகப் பழகுகிறேன். எனவே அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்று திரு டிரம்ப் கூறினார்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் வடகொரியப் பேராளர்கள் திரு டிரம்ப்பிடமிருந்து வந்த திரு கிம்மிற்கான கடிதத்தை மீண்டும் மீண்டும் வாங்க மறுத்தனர் என்று ஜூன் மாதம் வடகொரியாவைக் கண்காணிக்கும் சோலைத் தளமாகக் கொண்ட என்கே செய்தித்தளம் தெரிவித்தது.
திரு டிரம்ப் அதிபராக இருந்த முதல் தவணைக் காலத்தில் 2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை மூன்று முறை திரு டிரம்ப், திரு கிம் உச்சநிலைச் சந்திப்புகள் நடைபெற்றன.
அப்போது திரு கிம்முடன் பலமுறை கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாகச் சொன்ன திரு டிரம்ப் அவை அருமையான தருணங்கள் என்று வருணித்தார்.
அதையடுத்து திரு கிம் அணுவாயுதங்களைக் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டதை அடுத்து இருதரப்புக்கும் இடையிலான அரசதந்திர உறவு முறிந்தது.
திரு டிரம்ப் தமது இரண்டாம் தவணைக் காலத்தில் வடகொரியா ஓர் அணுவாயுத சக்தி என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 11ஆம் தேதி திரு கிம்முடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகச் சொன்ன திரு டிரம்ப், அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
திரு டிரம்ப்புடனான அரசதந்திர உறவு 2019ஆம் ஆண்டு முறிந்ததை அடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா எந்த ஆர்வமும் காட்டவில்லை.
மாறாக, அது அணுவாயுதங்களையும் தொலைதூரம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டங்களையும் விரிவுபடுத்தியது.
உக்ரேன்மீதான ரஷ்யப் போருக்கு நேரடி ஆதரவளிப்பதன் மூலம் ரஷ்யாவுடனான உறவை வடகொரியா வலுப்படுத்திக்கொண்டது.