தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து மன்னரை இழிவுபடுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கு: தக்சின் விடுவிப்பு

2 mins read
53c1ef18-bf0a-483e-9e69-9a8a05398604
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நீதிமன்றத்திலிருந்து புறப்பட்ட தக்சின் (வலது). - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்து மன்னரை இழிவுபடுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவாத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாக திரு தக்சின் தெரிவித்தார். அவரின் வழக்கறிஞரும் அவ்வாறு சொன்னார்.

தாய்லாந்து நீதிமன்றம் ஒன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) அவரை வழக்கிலிருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றம் இம்முடிவை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

“வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,” என்று திரு தக்சின் நீதிமன்றத்திலிருந்து புறப்படும்போது சிரித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக அவரின் வழக்கறிஞரும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதை உறுதிப்படுத்தினார். வழக்கு ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற காரணத்தை வழக்கறிஞர் வெளியிடவில்லை.

திரு தக்சின், சுயமாக நாடு கடந்து வெளிநாட்டில் வாழ்ந்தபோது கடந்த 2015ஆம் ஆண்டு தாய்லாந்து மாமன்னரை இழிவுபடுத்தியதாகக் கூறப்பட்டது. வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

76 வயது தக்சின் மீது, மாமன்னருக்கு விசுவாசமாக இருக்கும் அந்நாட்டு ராணுவம் வழக்கு தொடர்ந்தது. எனினும், தாம் என்றுமே மன்னருக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்துள்ளதாக திரு தக்சின் கூறிவந்துள்ளார்.

திரு தக்சின், செய்தியாளர்களிடம் பேசியபோது மஞ்சள் நிற கழுத்துப்பட்டை அணிந்திருந்தார். மஞ்சள், தாய்லாந்து மன்னராட்சியைச் சித்திரிக்கும் நிறமாகும்.

திரு தக்சின், பதவி ஓய்வு பெற்று 15 ஆண்டுகள் சுயமாக நாடு கடந்து வெளிநாட்டில் வாழ்ந்தார். இருந்தாலும், அவர் தொடர்ந்து தாய்லாந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நபராக விளங்குகிறார்.

தாய்லாந்தில் மன்னர்களை இழிவுபடுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்டம் நடப்பில் உள்ளது. அதன்கீழ், அண்மை ஆண்டுகளில் பதிவான 280க்கும் அதிகமான வழக்குகளில் திரு தக்சின் மீதான வழக்குதான் ஆக அதிக கவனத்தை ஈர்த்தது.

எதிர்ப்புக் குரலை அடக்கவும் அரசியல் எதிரிகளை ஒதுக்கவும் பழமைவாதிகள் அச்சட்டத்தைத் தவறாவப் பயன்படுத்துவதாக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்