போர்ட் ஓ பிரின்ஸ்: மெலிசா சூறாவளி கடந்துபோன கரீபிய நாடுகளில் 43 பேர் மாண்டனர். அவர்களில் 40 பேர் ஹைட்டியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய மூவர் ஜமைக்கா நாட்டினர். பொதுவாக இயற்கைப் பேரிடர்கள் நேர்ந்த பிறகு, மாண்டோர், காணாமற்போனோரின் எண்ணிக்கைகள் மாறக்கூடும் என்று கூறப்பட்டது.
ஜமைக்கா, கியூபா, ஹைட்டி நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளது சூறாவளி. அது இப்போது பஹாமாஸ் நோக்கி வடகிழக்குப் பாதையில் நகர்கிறது.
பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட கரீபிய நாடுகளில் வீடுகளும் கட்டடங்களும் கடுமையாகச் சேதமுற்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரச் சேவை தடைப்பட்டது. வீட்டுக் கூரைகளில் தஞ்சம் புகும் நிலைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது மெலிசா சூறாவளி.
ஜமைக்காவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 25,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். கடும் புயலால் இடம் மாற நேர்ந்த முதலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மெலிசா சூறாவளியின் வேகம் குறைந்து மணிக்கு 145 கிலோமீட்டராய் இருந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி நிலையம் தெரிவித்தது.
ஹைட்டியில் கட்டடங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மரங்களையும் மின்கம்பங்களையும் சாய்க்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வகத்தார் முன்னுரைக்கின்றனர்.


