வீடு புகுந்து திருடும் கும்பலின் தலைவர் சுட்டுக் கொலை: மலேசியா

2 mins read
ecf8a1d6-ada8-4ce1-9256-52cc1bbedf0d
அதிகாரிகளால் சுடப்பட்ட ஆடவர்மீது கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் போன்ற 44 குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குண்டர் குடும்பலின் தலைவர் என்று நம்பப்படும் 36 வயது மலேசிய ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) சுட்டுக் கொன்றனர். ஜாலான் புக்கிட் துங்குவில் ஆடவர் சுடப்பட்டதாகக் கூறப்பட்டது.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் தற்காலிக இயக்குநரான துணை ஆணையர் திரு ஃபடில் மார்சுஸ், சந்தேக ஆடவர்மீது கொள்ளை, வன்முறைக் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட 44 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளதைக் குறிப்பிட்டார்.

ஆடவர் ஓட்டிய சொகுசு காரை அதிகாலை சுமார் 4.10 மணிக்கு அதிகாரிகள் சோதனையிட முற்பட்டபோது ஆடவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக திரு ஃபடில் கூறினார்.

“அவர் காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தற்காப்புக்காக அதிகாரிகள் ஆடவரைச் சுட்டனர்,” என்று அவர் விளக்கம் அளித்தார்.

கூடுதல் விசாரணையின்போது ஆடவர் போலி வாகன எண்ணைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

சாலைப் போக்குவரத்து துறையிடம் சரிபார்த்ததில் அந்த எண் பதிவுசெய்யப்படவில்லை என்ற திரு ஃபடில், கார் நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

“ஆடவரின் காரிலிருந்து காவல்துறை அதிகாரிகளின் உடை, துப்பாக்கி, வீடு புகுந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள், போதைப் பொருள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தோம்,” என்று திரு ஃபடில் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த கும்பல் தனியார் வீடுகளைக் குறிவைத்து அதிலிருந்து தங்கக் கட்டிகளையும் ரொக்கத்தையும் களவாடியதாகக் கூறப்படுகிறது.

கும்பலைச் சேர்ந்த இதர உறுப்பினர்களைத் தேடிப் பிடிக்க கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் ஆகிய வட்டாரங்களின் காவல்துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்