பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கனத்த மழை வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடிந்தவரை வீட்டில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மை ஆண்டுகளாகப் பல பேர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாண்டனர். அதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் மட்டும் பெய்ஜிங்கின் பல பகுதிகளில் 200 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.
22 மில்லியன் மக்கள் வாழும் பெய்ஜிங்கில் ஆண்டுக்குச் சராசரியாக 600 மில்லிமீட்டர் மழை பதிவாகும்.
கடந்த ஜூலை மாதம் பெய்ஜிங்கில் பெய்த கனத்த மழையால் 40க்கும் அதிகமானோர் மாண்டனர்.
மாண்டவர்களில் பெரும்பாலானோர் மியூன் வட்டாரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்தவர்கள். திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் சிக்கி மடிந்தனர்.
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் குறைகூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே சீனாவின் குவான்டோங் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் வார இறுதியில் பெய்த கனத்த மழையால் ஐந்து பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர்களின் உடல்களை அதிகாரிகள் மீட்டனர்.

