ஹனோய்: மட்மோ புயல் காரணமாக வியட்னாமின் வடக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) கனமழை பெய்தது.
இதனால் தலைநகர் ஹனோயில் உள்ள சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
கடந்த ஒரு மாதமாக வியட்னாமின் வடக்குப் பகுதி புயல்களின் சீற்றத்தால் நிலைகுலைந்துள்ளது.
பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
கனமழைப் பொழிவு காரணமாக முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின.
இதன் விளைவாகச் சாலைகளில் இருந்த வாகனங்கள் பழுதடைந்து முடங்கியதுடன் முழங்கால் அளவிலான வெள்ள நீரிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக வியட்னாமிய அதிகாரிகள் கூறினர்.
இந்நிலை, வழக்கமானதாகிவிடும் என்று பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் கவலை தெரிவித்தனர்.
வெள்ளம் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நோய் பா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில விமானச் சேவைகளின் பயண நேரம் மாற்றப்பட்டன.
கடந்த வாரம் ஹனோய் நகரை புவாலோய் புயல் புரட்டிப்போட்டது.
அதில் குறைந்தது 51 பேர் மாண்டதுடன் ஏறத்தாழ 600 மில்லியன் அமெரிக்க டாலர் (S$774.68 மில்லியன்) பெறுமானமுள்ள பொருட்சேதம் ஏற்பட்டது.
அதிலிருந்து வியட்னாமிய மக்கள் மீண்டு வருவதற்குள் மட்மோ புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.