ஜெருசலம்: ஹமாஸ் போராளி அமைப்பு வேரோடு அழிக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு புதன்கிழமையன்று (ஜூலை 2) சூளுரைத்தார். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகப் புதிய பரிந்துரைகளை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் போராளி அமைப்பு தெரிவித்துள்ளபோதிலும் திரு நெட்டன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
60 நாள் போர் நிறுத்தத் திட்டத்தை இஸ்ரேல் ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து பிரதமர் நெட்டன்யாகு கருத்துரைக்கவில்லை.
அடுத்த வாரம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்புடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட இருக்கிறார். இவ்வாறு இருக்க, ஹமாஸ் போராளி அமைப்பு வேரோடு அழிக்கப்படும் என்று திரு நெட்டன்யாகு சூளுரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, போர் நிறுத்த நிபந்தனைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மிகக் கவனமாகப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கப்பட்டன.
பேச்சுவார்த்தைகளை கத்தாரும் எகிப்தும் வழிநடத்துகின்றன.
கிட்டத்தட்ட 21 மாதங்களாக காஸா போர் நடந்து வருகிறது. இதில் பலர் மாண்டுவிட்டனர். காஸாவில் ஏறத்தாழ இரண்டு மில்லியன் பேர் வசிப்பிடம், அத்தியாவசியப் பொருள்கள் இன்றி அவதிப்படுகின்றனர்.
காஸா முனையில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதன்கிழமையன்று (ஜூலை 2) இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 47 பேர் மாண்டதாக பாலஸ்தீனக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மாண்டோரில் காஸாவில் இயங்கி வரும் இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மார்வான் அல் சுல்தானும் ஒருவர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
காஸாவில் தொடரும் போர் குறித்து உலக நாடுகளும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் (ஐநா) கவலை தெரிவித்துள்ளன.