தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா போர் நிறுத்த பரிந்துரையை வரவேற்கும் ஹமாஸ்

2 mins read
d211f0fe-24ff-4161-93f5-f57786887cc9
ஹமாஸ் தரப்பிடம் உள்ள இஸ்ரேலியப் பிணையாளிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். - படம்: ஏஃப்பி

கெய்ரோ/ டெல் அவிவ்: அமெரிக்காவின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின் பரிந்துரை செய்யப்பட்ட காஸா சண்டைநிறுத்த உடன்பாட்டை வரவேற்கும் வகையில் பதில் அளித்திருப்பதாக ஜூலை 4ஆம் தேதி ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பிணையாளிகள் விடுதலையுடன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானத்தை முன்வைக்கும் உடன்பாடு குறித்து கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் சொன்னது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நீடிக்கும் 21 மாத போரை 60 நாள்களுக்கு நிறுத்திவைக்கும் இறுதி பரிந்துரையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதற்கு முன் அறிவித்தார். அதுகுறித்து இருதரப்பும் பதில் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

காஸாவில் உள்ள தனது மக்கள் மீதான வன்முறையை நிறுத்த மத்தியஸ்தர்கள் முன்வைத்த ஆக அண்மைய பரிந்துரை பற்றி தங்களுக்குள்ளும் பாலஸ்தீனத் தரப்புகளுடனும் கலந்துபேசியதாக ஹமாஸ் அதன் அதிகாரத்துவ இணையத்தளத்தில் பதிவிட்டது.

“உடன்பாட்டை அமல்படுத்தும் புதிய பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபட ஹமாஸ் முழுமனத்துடன் தயாராய் இருக்கிறது,” என்று அதன் அறிக்கை குறிப்பிட்டது.

60 நாள் சண்டைநிறுத்த உடன்பாட்டை முடிவு செய்வதற்கு அவசியமான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததாக திரு டிரம்ப் இம்மாதம் 1ஆம் தேதி தெரிவித்தார்.

ஜூலை 7ஆம் தேதி திரு டிரம்ப்பைச் சந்திக்கவிருக்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, திரு டிரம்ப்பின் அறிவிப்பு பற்றி இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

ஹமாஸ் தரப்பு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடவேண்டும் என்று திரு நெட்டன்யாகு தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

எகிப்து, கத்தாருடன் இணைந்து சண்டைநிறுத்த பேச்சுவார்த்தையை நடத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எகிப்து கூறியது.

“உடன்பாட்டை எட்ட சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் ஹமாஸ் தரப்பு சில நிபந்தனைகளைக் கூறியிருக்கிறது,” என்று எகிப்து சொன்னது.

காஸாவில் போரைத் துரிதமாக நிறுத்த திரு நெட்டன்யாகுவிடம் மிகவும் உறுதியாகப் பேசப்போவதாகத் திரு டிரம்ப் சொன்னார். இஸ்ரேலியப் பிரதமரும் போரை நிறுத்த விரும்புவதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

“அது நடக்கும் என்று நம்புகிறோம். அடுத்த வாரம் அது நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று சொன்ன திரு டிரம்ப், பிணையாளிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்