தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்த ஹமாஸ்

2 mins read
7e73fa78-1e9d-4810-a06c-0624707ba562
செம்பிறை வாகனங்கள் மூலம் ஹமாஸ் சில பிணைக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: ஹமாஸ் போராளிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) மேலும் சில பிணைக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.

சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸாவில் அமைதி நிலைக்க இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் ஒப்பந்தத்தை அறிவித்தார்.

ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் தன் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளையும் பிணைக் கைதிகளின் சடலங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

ஹமாஸ் உயிருடன் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. ஆனால் சில சடலங்களை அது இஸ்ரேலிடம் கொடுக்கவில்லை.

இதையடுத்து இஸ்ரேல் காஸாவுக்குள் செல்லும் உதவிப்பொருள்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது. அதையடுத்து தற்போது ஹமாஸ் எஞ்சியுள்ள சடலங்களைக் கொடுத்து வருகிறது.

ஹமாஸ் இதுவரை எட்டுப் பிணைக் கைதிகளின் சடலங்களைக் கொடுத்துள்ளது. இன்னும் 19 பிணைக் கைதிகளின் சடலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஒரு பிணைக்கைதியின் விவரம் இல்லை.

இந்நிலையில், ஹமாஸ் போராளிகள் காஸாவை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் காஸா சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சில காஸா மக்கள் இஸ்ரேலுடன் சேர்ந்து செயல்பட்டதாக அவர்களை ஹமாஸ் கொன்றது.

அதிபர் டிரம்ப், ஹமாஸ் படையினர் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு காஸாவில் அதன் ஆதிக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடாவிட்டால் ராணுவ முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஹமாஸ் போராளிகள் காஸாவில் வன்முறை நடவடிக்கையைத் தொடங்கிவிட்டதால் வரும் நாள்களில் என்ன நடக்கும் என்று தெரியாமல் பாலஸ்தீன மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கு முன்னர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்‌சமின் நெட்டன்யாகு காஸாமீதான போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால் ஹமாஸ் அதன் ஆயுதத்தைக் கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதை ஹமாஸ் ஏற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
ஹமாஸ்இஸ்‌ரேல்போர்