இவாட்: ஜப்பானில் பொதுமக்களைக் கரடிகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அதனைத் தொடர்ந்து, கரடிகளைக் கொல்ல அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் திருத்தப்பட்ட புதிய சட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 13) அமலுக்கு வந்தது.
இதுவரை கடத்தல் போன்ற மிகவும் கடுமையான சம்பவங்களின்போது மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்த அந்நாட்டுக் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கரடிகளின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் அதிகரித்ததை அடுத்து, துப்பாக்கிப் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை கரடிகளால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 13ஆகப் பதிவானதாக அந்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்தது.
கரடித் தாக்குதல்கள் அதிகமாகப் பதிவாகியுள்ள இவாட், அகிதா ஆகிய பகுதிகளின் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுவதில் தேர்ச்சி பெற்ற பணிக்குழுக்கள் செயல்படும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் கட்டளை அதிகாரி, உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள ஒருவர், இரு துப்பாக்கிச்சுடும் வீரர்கள் ஆகியோர் அடங்கிய இரு குழுக்கள் இருக்கும்.

